கட்டி முடிக்கப்பட்ட ரே‌ஷன் கடையை திறக்ககோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் முற்றுகையிட்டனர் குடும்ப அட்டைகளை வீசியதால் பரபரப்பு


கட்டி முடிக்கப்பட்ட ரே‌ஷன் கடையை திறக்ககோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் முற்றுகையிட்டனர் குடும்ப அட்டைகளை வீசியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 March 2017 4:15 AM IST (Updated: 21 March 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

கட்டி முடிக்கப்பட்ட ரே‌ஷன் கடையை திறக்க வலியுறுத்தி திருத்தணி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது குடும்ப அட்டைகளை சிலர் வீசி எறிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருத்தணி,

திருத்தணி அருகில் உள்ள ராமாபுரத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6½ லட்சம் செலவில் அந்த பகுதி மக்களுக்கு ரே‌ஷன் பொருட்கள் வழங்க வசதியாக ரே‌ஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டும் இன்னும் அந்த ரே‌ஷன் கடை திறக்கப்படாமல் உள்ளது.

இதனால் அந்த பகுதி பொதுமக்கள், சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சூர்யநகரில் உள்ள ரே‌ஷன் கடையில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதனால் அவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

எம்.எல்.ஏ.வை முற்றுகை

இந்த நிலையில் திருத்தணி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நரசிம்மன், திருத்தணி ஒன்றியத்தில் உள்ள கஜலட்சுமிபுரம், சூர்யநகரம், ராமாபுரம் ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய வந்தார்.

அப்போது ராமாபுரம் வந்த எம்.எல்.ஏ. நரசிம்மனை, அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் கையில் ரே‌ஷன் கார்டுடன் சென்று முற்றுகையிட்டனர்.

தங்கள் பகுதியில் ரே‌ஷன் கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டும் இன்னும் திறக்கப்படாததால் தாங்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்த அவர்கள், உடனடியாக ரே‌ஷன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

குடும்ப அட்டைகளை வீசினர்

அப்போது அங்கு இருந்த பொதுமக்களில் சிலர், திடீரென தங்களின் குடும்ப அட்டைகளை வீசி எறிந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து எம்.எல்.ஏ. நரசிம்மன், பொது மக்களை சமாதானப்படுத்தினார். ரே‌ஷன் கடையை திறக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதை ஏற்று பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதற்கிடையில் ராமாபுரம் கிராமம் மற்றும் இருளர் காலனியை சேர்ந்த திரளான பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், ராமாபுரம் கிராமத்தில் புதிதாக பள்ளிக்கட்டிடம் கட்டவும், கட்டி முடித்து திறக்கப்படாத ரே‌ஷன் கடையை திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது தொடர்பாக கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் வழங்கினர்.


Next Story