திருவேற்காட்டில் மீன் மார்க்கெட்டை அகற்ற கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
திருவேற்காட்டில் மீன் மார்க்கெட்டை அகற்ற கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பெண்கள் தாம்பூல தட்டில் கோரிக்கை மனுவை வைத்து எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்,
தமிழக பாரம்பரிய முறைப்படி ஆண்கள் பட்டு வேட்டி, சட்டை அணிந்தும், பெண்கள் கையில் தாம்பூல தட்டில் வெற்றிலை, பாக்கு, வாழை பழம் உள்ளிட்டவைகளுடன் தங்களின் கோரிக்கை மனுவையும் வைத்து அதை மாவட்ட கலெக்டரிடம் வழங்க எடுத்து வந்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:–
மீன் மார்க்கெட்திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 7–வது வார்டு ராஜீவ் நகர் பகுதியில் கடந்த 12 ஆண்டுகளாக நகராட்சி அனுமதி இன்றி மீன்மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மீன் கழிவுகளை வெளியே கொட்டுவதால் அந்த பகுதியில் குடிநீர் மாசு அடைகிறது. கொசுத்தொல்லையும் ஏற்படுவதால் ராஜீவ் நகர், சொக்கலிங்கம் நகர், ராஜீவ் நகர் விரிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அந்த மீன்மார்க்கெட்டை அகற்றக்கோரி நகராட்சி ஆணையர், மாவட்ட கலெக்டருக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தாம்பூல தட்டில் எங்கள் கோரிக்கை மனுவை வைத்து கலெக்டரிடம் கொடுக்க வந்து உள்ளோம்.
கலெக்டர் ஆய்வுஇனியாவது மாவட்ட கலெக்டர் எங்கள் பகுதிக்கு நேரடியாக வந்து ஒரு நாள் முழுவதும் தங்கி அந்த மீன்மார்கெட்டை ஆய்வு செய்து அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து அங்கிருந்த போலீசார், அவர்களில் சிலரை மட்டும் கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் மனு அளிக்க உள்ளே அனுமதித்தனர். மேலும் பெண்கள் தாம்பூல தட்டில் வைத்து இருந்த வெற்றிலை, பாக்கு, பழம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் தாம்பூல தட்டில் கோரிக்கை மனுவை வைத்து கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் அளித்து விட்டு கலைந்து சென்றனர்.