குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மனேரி ஊராட்சியில் சுமார் 1,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு 3 ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது இந்த 3 ஆழ்துளை கிணறுகளில் அமைக்கப்பட்ட மின் மோட்டார்கள் பழுதானதால் அவற்றை பழுது பார்க்க கழற்றி எடுத்து சென்று விட்டனர். மேலும் இந்த கிராமத்தில் உள்ள கைப்பம்பு சீராக இயங்கவில்லை. இதனால் கடந்த 10 நாட்களாக அம்மனேரி கிராம மக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர்.
காலி குடங்களுடன் முற்றுகைஇது குறித்து இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம பெண்கள் உள்பட பொதுமக்கள் குடிநீர் கேட்டு, கையில் காலி குடங்களுடன் நேற்று ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமாரி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக டிராக்டர்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும், இன்னும் ஒரு வாரத்தில் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
அதை ஏற்று தங்கள் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.