திருச்சியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்


திருச்சியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 21 March 2017 4:30 AM IST (Updated: 21 March 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்கவேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும், உள்ளாட்சி தேர்தலை காலதாமதம் இன்றி நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 14-ந்தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டம் நடத்திய அவர்கள் மார்ச் 20-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

இந்த அறிவிப்பின்படி நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து திரண்டு வந்தனர். ஆனால் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் போராட்டம் நடத்த அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

காத்திருப்பு போராட்டம்

இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வழக்கமாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடத்தில் தரையில் அமர்ந்து அவர்கள் தங்களது காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாநில செயலாளர் பழனியப்பன், மாவட்ட தலைவர் மருது பாண்டி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். காலையில் தொடங்கிய அவர்களது போராட்டம் நேற்று இரவிலும் தொடர்ந்தது. சங்க நிர்வாகிகள் இரவில் அங்கேயே படுத்து தூங்கினர். இன்றும் (செவ்வாய்க்கிழமை) போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். 

Next Story