போக்குவரத்து போலீசாருக்கு மோர், எலுமிச்சை பழச்சாறு வழங்கும் நிகழ்ச்சி


போக்குவரத்து போலீசாருக்கு மோர், எலுமிச்சை பழச்சாறு வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 21 March 2017 4:15 AM IST (Updated: 21 March 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி நகரில் போக்குவரத்து போலீசாருக்கு மோர், எலுமிச்சை பழச்சாறு வழங்கும் நிகழ்ச்சியை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் தொடங்கி வைத்தார்.

திருச்சி,

திருச்சி நகரில் முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் பணியாற்றி வருகிறார்கள். தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயில் கொடுமையால் அவர்கள் களைப்படையாமல் இருப்பதற்காக மோர் மற்றும் எலுமிச்சை பழச்சாறு வழங்கப்பட இருக்கிறது. திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் ரவுண்டானா பகுதியில் நேற்று போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணியில் இருந்த போலீசாருக்கு பழச்சாறு வழங்கும் நிகழ்ச்சியை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குற்ற செயல்கள் குறைந்தது

திருச்சி மாநகர பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ள போலீசார் மற்றும் அதிகாரிகள் 244 பேருக்கு தினமும் காலை, மதியம் ஆகிய இரு வேளையும் மோர் மற்றும் எலுமிச்சை பழச்சாறு வழங்கப்படும். வருகிற ஜூலை மாதம் வரை இது வழங்கப்படும். திருச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குற்றத்தடுப்பு நடவடிக்கைகளிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக தாலிச்செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்கள் வெகுவாக குறைந்து இருக்கிறது.

182 வழக்குகள் பதிவு

மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பொதுமக்கள் எளிதாக போலீசாரை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் ‘விசிபிள் டீம்’ என்ற பெயரில் ஒரு போலீஸ் குழு அமைக்கப்படும். இந்த குழுவில் உள்ள போலீசாரிடம் பொதுமக்கள் உடனுக்குடன் புகார் தெரிவிக்கலாம். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் திருச்சி மாநகர பகுதியில் 3,989 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக 182 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன், உதவி கமிஷனர்கள் விக்னேஸ்வரன், முருகேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

Next Story