எளம்பலூரில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


எளம்பலூரில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 March 2017 4:15 AM IST (Updated: 21 March 2017 2:36 AM IST)
t-max-icont-min-icon

சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி எளம்பலூரில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஊராட்சி காலனி தெரு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியிலுள்ள பெரும்பாலான மக்கள் தெருக்குழாய்களில் வரும் குடிநீரை பிடித்து தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக எளம்பலூர் காலனி தெரு பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் அதிக விலை கொடுத்து குடிநீரை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. நீண்ட தூரம் நடந்து சென்று மக்கள் குடிநீர் எடுத்து வருகின்றனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் ஆத்திரமடைந்த எளம்பலூர் காலனி தெரு மக்கள் எளம்பலூர்- பெரம்பலூர் சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் கற்கள், கட்டைகள் உள்ளிட்டவற்றை வைத்தனர்.

அப்போது வாரத்திற்கு ஒரு முறையாவது தண்ணீர் சீராக வினியோகம் செய்யப்பட வேண்டும். மேலும் குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு டேங்கர் லாரிகள் உள்ளிட்டவற்றில் அவ்வப்போது தண்ணீர் கொண்டு வந்து வினியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி உள்பட அதிகாரிகள், பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து அங்கிருந்து மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story