மதுபான கடைக்கு சங்கு; மீனவர் பிரச்சினைக்கு தூக்கு: கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன போராட்டங்கள்


மதுபான கடைக்கு சங்கு; மீனவர் பிரச்சினைக்கு தூக்கு: கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன போராட்டங்கள்
x
தினத்தந்தி 21 March 2017 4:00 AM IST (Updated: 21 March 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கு ஊதியும், மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தூக்குக்கயிறு மாட்டியும் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன போராட்டங்கள் நடந்தன.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கிற பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர். நூதன போராட்டங்களில் ஈடுபட்டு சிலர் கலெக்டரிடம் மனுக்களை கொடுத்தனர்.

சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் ஜெய்முருகேஷ் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கோரிக்கை அட்டையை கழுத்தில் மாலையாக அணிந்து வந்திருந்தனர். அதில் ஒருவர், தனது கையில் சங்கு வைத்திருந்தார்.

கலெக்டர் அலுவலகம் முன்பு வந்ததும் அவர் சங்கு ஊதினார். மற்றவர்கள், கண்டன கோ‌ஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். அதாவது தேனி என்.ஆர்.டி. சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையால் பொதுமக்களுக்கு தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும், அந்த கடையை அகற்றக்கோரி பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது. போராட்ட முடிவில் கலெக்டரிடம், சமத்துவ மக்கள் கழகத்தினர் மனு அளித்தனர்.

தூக்குக்கயிறு

இதேபோல் தமிழ்ப்புலிகள் கட்சியை சேர்ந்த சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தங்களின் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டியபடி வந்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். தமிழக மீனவர்கள் பிரச்சினை, மாணவர் பிரச்சினைகளில் மத்திய, மாநில அரசுகள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் தமிழ்ப்புலிகள் கட்சியின் தொண்டரணி மாவட்ட செயலாளர் மாரி தலைமையில் மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், ‘தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையால் சுட்டுக் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் இறந்துள்ளார். தஞ்சையில் உள்ள ஒரு கல்லூரியில் தேனி மாணவர் பெருமாள் தாக்கப்பட்டு உள்ளார். எனவே தமிழக மீனவர்கள் மற்றும் மாணவர்கள் பிரச்சினைக்கு முழு தீர்வு கிடைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். டெல்லியில் இறந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்துக்கு அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.


Next Story