உலக காசநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டன


உலக காசநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டன
x
தினத்தந்தி 21 March 2017 4:30 AM IST (Updated: 21 March 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

உலக காசநோய் தினத்தையொட்டி நாகர்கோவிலில் விழிப்புணர்வு ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டன.

நாகர்கோவில்,

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 24–ந் தேதி உலக காசநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி குமரி மாவட்ட காசநோய் மையம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

நேற்று நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகம் மற்றும் மணிமேடை சந்திப்பு ஆகிய பகுதிகளில் காசநோய் விழிப்புணர்வு ராட்சத பலூன்கள் பறக்க விடும் நிகழ்ச்சி நடந்தது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டீன் டாக்டர் ரவீந்திரன் விழிப்புணர்வு பலூனை பறக்க விட்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–

3 மடங்கு அதிகம்

எல்லோரையும் காசநோய் பாதித்தாலும் சர்க்கரை நோயாளிகளை இந்நோய் அதிகமாக பாதிக்கிறது. சாமானியர்களை விட சர்க்கரை நோயாளிகளுக்கு காசநோய் வருவதற்கான வாய்ப்புகள் 3 மடங்கு அதிகம். ஆகவே சர்க்கரை நோயாளிகள் இருமல், சளி ஏற்பட்டால் இரண்டு வாரம் வரை காத்திராமல் உடனடியாக சளி பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் இந்த மாவட்டத்தில் சிகிச்சை பெறும் காசநோயாளிகளில் 23 சதவீதம் பேர் சர்க்கரை நோயாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு டீன் ரவீந்திரன் கூறினார்.

பின்னர் குமரி மாவட்ட காசநோய் தடுப்புத் திட்ட துணை இயக்குனர் டாக்டர் வி.பி.துரை பேசும்போது, “காசநோயாளிக்கு அளிக்கப்படும் மாத்திரைகள் உலகத்தரம் வாய்ந்தது. காசநோயாளிகளின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் டாட்ஸ் சிகிச்சை மூலம் நோயை குணப்படுத்தி சாதாரண மனிதனாக வாழலாம். காசநோயாளி விரும்பினால் காசநோய் சிகிச்சையை தனியார் மருத்துவமனையிலும் அரசின் டாட்ஸ் சிகிச்சை மூலம் எடுத்துக்கொள்ளலாம். காசநோயை முற்றிலும் குணப்படுத்த முடியும். இந்தியாவில் 2025–க்குள் காசநோயை ஒழிக்க ஒவ்வொரு இந்தியரும் பாடுபட வேண்டும்’’ என்றார்.

இதில் மருத்துவ அதிகாரி முத்துகுமார் மற்றும் காசநோய் பணியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை மாவட்ட காசநோய் மையம் ஏற்பாடு செய்திருந்தது.


Next Story