கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்


கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 21 March 2017 4:30 AM IST (Updated: 21 March 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.

நாகர்கோவில்,

ஊராட்சி செயலாளர்களுக்கு அறிவித்தபடி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14–ந் தேதி முதல் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி, நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் திருச்சியில் நடந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்ட முடிவின்படி குமரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலையில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

சென்னையில் பெருந்திரள் முறையீடு

போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ராஜகுமார் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் சுமதி கோரிக்கைகளை விளக்கி பேசினார். சங்க நிர்வாகிகள் தங்கராஜ், அன்பு, ஜெயந்தி, ஆனந்த், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பகவதியப்பன், வருவாய் துறை ஊழியர் சங்க செய்யது அலி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காத்திருப்பு போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வரை நடைபெறும் என்றும், சென்னையில் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற இருப்பதால் அதில் பங்கேற்பதற்காக இன்று இரவு சென்னை புறப்பட்டுச் செல்ல இருப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வருவாய்த்துறை              அலுவலர்கள் ஆதரவு

நேற்று 7–வது நாளாக நடந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சிப்பிரிவு அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஊராட்சி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தன. ஊராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 442 பேரில் 288 பேர் நேற்றைய போராட்டத்தில் பங்கேற்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்துக்கு குமரி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையொட்டி நேற்று 1 மணி நேரம் அலுவலகப்பணிகளை புறக்கணித்தனர். போராட்டத்தில் அலுவலக உதவியாளர்கள் முதல் தாசில்தார் வரை 350 பேர் கலந்து கொண்டதாக சங்க குமரி மாவட்ட செயலாளர் சுப்பிரமணி தெரிவித்தார்.


Next Story