கூட்டுறவு வங்கியில் பெற்ற கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு


கூட்டுறவு வங்கியில் பெற்ற கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 21 March 2017 3:45 AM IST (Updated: 21 March 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு வங்கியில் பெற்ற கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ஊட்டி,

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் மொத்தம் 96 மனுக்களை அளித்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் சங்கர் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் துப்புரவு தொழிலாளர்கள் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்

குன்னூர் நகராட்சியில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் குன்னூர் நகராட்சியில் உள்ள கூட்டுறவு வங்கியில் (துப்புரவு தொழிலாளர் சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில்) தொழிலாளர்கள் கடன் பெற்று உள்ளனர். இந்த கடனுக்கான தொகையை பிரதி மாதம் 5–ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று கூட்டுறவு வங்கி ஊழியர்கள் நிர்ப்பந்தம் செய்கின்றனர். ஆனால் எங்களுக்கு 5–ந்தேதிதான் சம்பளம் வழங்கப்படுகிறது. இதன்காரணமாக குறிப்பிட்ட தேதிக்குள் கடனை திரும்ப செலுத்த முடியாததால் அபராத வட்டி விதிக்கப்படுகிறது.

மேலும், எங்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் கடன் மற்றும் அதற்கான வட்டிக்கு ரசீது வழங்கப்படுவது இல்லை. எனவே எங்களுடைய நலனை கருத்தில் கொண்டு கூட்டுறவு வங்கியில் பெற்ற கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மாணவர்களுக்கு பரிசு

இதனை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ–மாணவிகள் இடையே நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் சங்கர் வழங்கினார். மேலும், 68 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான 3 சக்கர சைக்கிள் உள்பட பல்வேறு உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.


Next Story