பாடங்களில் தோல்வி அடைந்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே சேரங்கோடு தேயிலை தொழிற்சாலை குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சதீஷ் (வயது 24). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சதீஷ் வீடு திரும்பினார். ஏற்கனவே 5 பாடங்களில் தோல்வி அடைந்த சதீஷ் மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர் காரணம் கேட்டபோது உடல் நிலை சரியில்லாததால் பாடங்களில் தோல்வி அடைந்து விட்டதாக தெரிவித்தார். இதையொட்டி சுல்தான்பத்தேரி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சதீசை பெற்றோர் சேர்த்தனர். பின்னர் சிகிச்சை முடிந்து அவர் வீட்டுக்கு வந்தார். ஆனால் சிறிது நேரத்தில் அவர் காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் அவரை தேடி பார்த்தனர். அப்போது கோட்டப்பாடி பகுதியில் உள்ள ஒரு மரத்தில் சதீஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ, சப்–இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.