அடிப்படைவசதி செய்து தரக்கோரி மலைவாழ் மக்கள் நடைபயணம்
அடிப்படைவசதி செய்து தரக்கோரி மலைவாழ் மக்கள் 12 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக வந்து மனு அளித்தனர்.
ஆனைமலை
மேற்கு தொடர்ச்சி மலைக்குன்றுகள் மற்றும் மலை அடிவாரத்தில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இங்கு மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில், ஆனை மலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகத்தில் சர்க்கார்பதி, நாகர் ஊற்று சின்னாறுபதி, பழையசர்க்கார்பதி உள்ளிட்ட பகுதிகளில் நீண்டகாலமாக வசித்து வரும் மலைவாழ் மக்க ளுக்கு வீடு, பாதுகாக்கப்பட்ட தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப் படை வசதி இல்லை. எனவே அவர்கள் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதி, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அங்கு மற்ற துறையினர் வளர்ச்சி பணிகளை செய்ய முடியாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது. எனவே வனத்துறையினரின்கவனத்தை ஈர்க்கும் வகையில் சேத்துமடையில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரம் உள்ள பொள்ளாச்சி வனச்சரக அலுவலகத்துக்கு மலைவாழ் மக்கள் நேற்று நடைபயணமாக வந்தனர்.
அடிப்படை வசதி கோரி மனுஇதற்கு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் துரைசாமி, விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பட்டீஸ்வரமூர்த்தி, நிர்வாகிகள் குஞ்சாள், அம்மாசை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேத்துமடையில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு மலைவாழ் மக்கள் நடந்தே பொள்ளாச்சி வனச்சரக அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பொள்ளாச்சி வனச் சரகர் ரவிச்சந்திரனிடம், அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மனு அளித்தனர்.