ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு: 26 பணியிடங்களுக்கு 5 ஆயிரம் இளைஞர்கள் குவிந்தனர்
கோவையில் ராணுவத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள 26 பணியிடங்களுக்கு நடந்த தேர்விற்காக 5 ஆயிரம் இளைஞர்கள் குவிந்தனர்.
கோவை,
கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் 110–வது பிரதேச ராணுவ படைக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, குஜராத், கேரளா, ராஜஸ்தான், மராட்டியம், கர்நாடகா மற்றும் யூனியன் பிரதேசங்களான கோவா, டையூ டாமன், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். மொத்தம் 26 பணியிடங்களுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
இவர்கள் அனைவரும் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்துக்கு அதிகாலை முதலே குவிய தொடங்கினார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் முதலில் உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட உயரம் உள்ளவர்கள் மட்டும் தேர்வு மைதானத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அந்த உயரம் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதில் ஏராளமானவர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறினார்கள்.
மருத்துவ பரிசோதனைஅதைத் தொடர்ந்து ஓட்டப்போட்டி நடைபெற்றது. இதிலும் ஏராளமான பேர் தகுதி பெறவில்லை. அதன்பின்னர் மார்பளவு, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்ட இந்த தேர்வில் சில நூறு பேர் தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
எத்தனை பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது பற்றி ராணுவ அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர். இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 24–ந் தேதி வரை மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.
சாலையோரம் படுத்து தூங்கினார்கள்முன்னதாக ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் முதல் நூற்றுக்கணக்கானவர்கள் கோவைக்கு வர தொடங்கினார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளியூர்காரர்களாக இருந்ததால் அவர்கள் போலீஸ் பயிற்சி பள்ளியை ஓட்டிய சாலையோரங்களில் படுத்து தூங்கினார்கள். ராணுவத்தில் சேருவதற்காக 5 ஆயிரம் பேர் குவிந்ததால் கோவை போலீஸ் பயற்சி பள்ளி மைதானம் இளைஞர்கள் கூட்டமாக காணப்பட்டது.
அவர்கள் தேர்வுக்காக மைதானத்துக்குள் சென்ற சிறிது நேரத்திலேயே தகுதி இழந்து திரும்பினார்கள். இதனால் அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் எங்கே இருக்கிறது என்று கேட்ட வண்ணம் இருந்தனர். ராணுவத்துக்கான ஆட்கள் தேர்வு அதிகாலை 5 மணிக்கு தொடங்கி காலை 11 மணிக்குள் முடிந்தது. அதுவரை தேர்வு மைதானத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால் ஒரு மணியளவில் அந்த மைதானத்தில் ஆட்களையே காண முடியவில்லை. அவ்வளவு விரைவாக தேர்வுக்கு வந்தவர்கள் தகுதி இழந்து திரும்பி சென்றனர்.