குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவி, குழந்தை மீது தாக்குதல்
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவி, குழந்தை மீது தாக்குதல் நடத்திய தொழிலாளியை போலீசார் தேடிவருகிறார்கள்.
உப்பள்ளி,
உப்பள்ளி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவி, குழந்தை மீது தாக்குதல் நடத்திய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
தாக்குதல்உப்பள்ளி தாலுகா சிரேவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் அனுமந்தப்பா(வயது 32). தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி அன்னபூர்ணா(24) என்ற மனைவியும், 2 வயதில் மது என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மதுஅருந்தும் பழக்கத்திற்கு அடிமையான அனுமந்தப்பா தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அன்னபூர்ணாவிடம் தகராறு செய்து வந்து உள்ளார். மேலும் அவரை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அனுமந்தப்பா குடிபோதையில் அன்னபூர்ணாவிடம் தகராறு செய்து உள்ளார். இதனால் அன்னபூர்ணாவுக்கும், அனுமந்தப்பாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த அனுமந்தப்பா அருகில் கிடந்த உருட்டுக்கட்டையால் அன்னபூர்ணாவையும், குழந்தை மதுவையும் சரமாரியாக தாக்கினார்.
தீவிர சிகிச்சைஇதில் படுகாயம் அடைந்த அன்னபூர்ணாவும், குழந்தை மதுவும் வலியால் அலறி துடித்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அனுமந்தப்பா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் அன்னபூர்ணாவையும், குழந்தை மதுவையும் மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உப்பள்ளி புறநகர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று அன்னபூர்ணாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ‘‘என்னையும், எனது குழந்தையையும் தாக்கிய கணவர் அனுமந்தப்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று புகார் அளித்தார்.
வலைவீச்சுஅந்த புகாரின்பேரில் உப்பள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அனுமந்தப்பாவை வலைவீசி தேடிவருகிறார்கள்.