சாமளாபுரம் அருகே கிராமத்தில் டாஸ்மாக் அமைக்க எதிர்ப்பு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


சாமளாபுரம் அருகே கிராமத்தில் டாஸ்மாக் அமைக்க எதிர்ப்பு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 21 March 2017 4:15 AM IST (Updated: 21 March 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

சாமளாபுரம் அருகே காளிப்பாளையம் கிராமத்தில் டாஸ்மாக் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் அந்த கிராம பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னாராமசாமி முன்னிலைவகித்தார். கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.

இதில், பல்லடம் தாலுகா சாமளாபுரம் அருகே உள்ள காளிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் நேற்று மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் கிராமத்தில் சுமார் 1,000 குடியிருப்புகளும் பள்ளிகள், கோவில்கள் மற்றும் விசைத்தறி கூடங்கள், நூற்பாலை, சைசிங் ஆலை மற்றும் விவசாய நிலங்கள் அமைந்துள்ளன. எங்கள் ஊரின் மையப்பகுதியில் டாஸ்மாக் அமைக்க ஒருசிலர் முயற்சி செய்து வருகிறார்கள். எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் அமைந்தால் பள்ளி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும். எனவே, எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது என்று கூறியிருந்தனர்.

ரூ.10 நாணயம் பிரச்சினை

திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கொடுத்த மனுவில், பல்லடம் நகரில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கு தகுந்தார் போல் போதிய சாலை வசதி இந்த நகரில் இல்லை. பல்லடம்–மங்கலம் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை. அதுபோல் பல்லடம் நகருக்குள் வெளியூர் வாகனங்கள் வராமல் தடுக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

செங்கப்பள்ளியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் எம்.ராமு என்பவர் கொடுத்த மனுவில், நான் அரசு போக்குவரத்து கழகத்தில், திருப்பூர் மண்டலத்துக்கு உட்பட்ட பல்லடம் கிளையில் கண்டக்டராக வேலை செய்து வருகிறேன். கடந்த சில நாட்களாக ரூ.10 நாணயம் செல்லாது என்று செய்தி பரவி வருகிறது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி ரூ.10 நாணயம் செல்லும் என்று கூறுகிறது. ரிசர்வ் வங்கியின் உத்தரவை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. குறிப்பாக பஸ்களில் பயணிகள் ரூ.10 நாணயம் என்றால் வாங்க மறுக்கிறார்கள். இதனால் நாங்கள் பிற பயணிகளிடம் ரூ.10 நாணயத்தை வாங்க முடிவதில்லை. இதன்காரணமாக பஸ் பயணிகளுக்கும், நடத்துனர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அதே நேரம் பொதுமக்கள் கொடுக்கும் நாணயங்களை வாங்கி நாங்கள், அரசு போக்குவரத்து கழகத்தில் கொடுத்தால் அங்குள்ள காசாளர் அதை வாங்க மறுக்கிறார். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

குடிசை மாற்று வாரிய வீடு

திருப்பூரை சேர்ந்த சரஸ்வதி என்பவர் கொடுத்த மனுவில், நான் தாராபுரம் ரோடு சங்கிலிப்பள்ளம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தேன். கடந்த 2011–ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில், எனது மகள்கள், புவனேஸ்வரி(வயது 20), ஞானாம்பாள்(18) ஆகிய 2 பேரும் அடித்துச்செல்லப்பட்டு இறந்து விட்டனர். அப்போது, அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. அத்துடன் அந்த வீட்டை காலி செய்யக்கூறி, வீட்டை இடித்து விட்டனர். அதற்கு பதிலாக அவினாசி தாலுகா ராக்கியாபாளையம் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அந்த பட்டாவை வருவாய்த்துறை ரத்து செய்துவிட்டது. இதனால் குடிசை மாற்று வாரியத்தில் வீடு கேட்டு கடந்த 5 ஆண்டுகளாக மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பெருமாநல்லூர் அருகே உள்ள வள்ளிபுரம் ஊராட்சி அம்மா நெசவாளர் பசுமைநகர் பகுதி பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், தமிழக அரசின் நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், கடந்த 2013–14–ம் நிதியாண்டில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 12 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பயனாளிகளுக்கு என்று கட்டி முடிக்கப்பட்ட பசுமைநகரில் 400 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் இந்த பகுதியில் குடியேறி 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. ஆனால் எங்கள் பகுதிக்கு என்று குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி என்று எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. இதனால் நாங்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கி வருகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


Next Story