நஞ்சன்கூடு இடைத்தேர்தல் பா.ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
நஞ்சன்கூடு இடைத்தேர்தலில் போட்டியிட பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நேற்று தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
மைசூரு,
நஞ்சன்கூடு இடைத்தேர்தலில் போட்டியிட பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நேற்று தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இடைத்தேர்தல்கர்நாடகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சீனிவாச பிரசாத். இவர் முதல்–மந்திரி சித்தராமையாவின் மந்திரி சபையிலும் இடம்பெற்று இருந்தார். இந்த நிலையில் மந்திரிசபையை மாற்றி அமைக்கும்போது சீனிவாச பிரசாத் கழற்றி விடப்பட்டார்.
இதனால் காங்கிரஸ் மீதும், சித்தராமையா மீதும் சீனிவாச பிரசாத் அதிருப்தி அடைந்தார். மேலும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் இருந்து விலகினார். இதனால் நஞ்சன்கூடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம்(ஏப்ரல்) 9–ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
வேட்புமனு தாக்கல்இதற்கிடையே சீனிவாச பிரசாத், பா.ஜனதாவில் இணைந்தார். அதையடுத்து நஞ்சன்கூடு தொகுதி பா.ஜனதா வேட்பாளராக சீனிவாச பிரசாத் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் நஞ்சன்கூடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக களளே கேசவமூர்த்தி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து நஞ்சன்கூடு தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று சீனிவாச பிரசாத்தும், களளே கேசவமூர்த்தியும் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்கள் தங்கள் கட்சியின் தொண்டர்களுடன் சென்று தேர்தல் அதிகாரி ஜெகதீசிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இருபெரும் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தையடுத்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க நேற்று அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.