ஆதிவாசிகளுக்கு இலவச ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது


ஆதிவாசிகளுக்கு இலவச ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது
x
தினத்தந்தி 21 March 2017 3:31 AM IST (Updated: 21 March 2017 3:31 AM IST)
t-max-icont-min-icon

ஆதிவாசி மக்களுக்கு இலவச ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது என்று மேல்–சபையில் மந்திரி ஆஞ்சனேயா கூறினார்.

பெங்களூரு,

ஆதிவாசி மக்களுக்கு இலவச ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது என்று மேல்–சபையில் மந்திரி ஆஞ்சனேயா கூறினார்.

கர்நாடக மேல்–சபையில் நேற்று கேள்வி நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் மோட்டம்மா கேட்ட கேள்விக்கு சமூக நலத்துறை மந்திரி ஆஞ்சனேயா பதில் அளிக்கையில் கூறியதாவது:–

ஒரு கிலோ நெய்

கர்நாடகத்தில் ஆதிவாசி மக்கள் காடுகளில் வசிக்கிறார்கள். மழை காலங்களில் அவர்கள் வாழ்க்கையை நடத்த வேலைக்கு செல்ல முடிவது இல்லை. அதனால் மழை காலத்தில் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சிக்கமகளூரு, சாம்ராஜ்நகர், மைசூரு உள்பட 7 மாவட்டங்களில் ஆதிவாசி மக்களுக்கு ஊட்டசத்து உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

உரிய தகுதி இருந்தும் இந்த திட்டத்திற்கு வெளியே உள்ள ஆதிவாசிகளையும் இதில் சேர்க்க உரிய ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆய்வில் தகுதியான ஆதிவாசிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கும் இந்த ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கப்படும். தற்போது ஆதிவாசி மக்களுக்கு உணவு பொருட்களுடன் ஒரு கிலோ நெய் வழங்கப்படுகிறது.

4,673 குடும்பங்கள்

நெய்யுக்கு பதிலாக முட்டைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இந்த திட்டத்திற்காக ரூ.7 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.3.50 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது 4 ஆயிரத்து 673 குடும்பங்களுக்கு இந்த உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. மலைகுடி மற்றும் மேதாஸ் ஆகிய பழங்குடியின மக்களுக்கும் இந்த உணவு பொருட்களை வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு ஆஞ்சனேயா கூறினார்.


Next Story