சட்டசபையில் குறிப்பேடு விவகாரம் தொடர்பாக பா.ஜனதா கட்சி தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றது
கர்நாடக சட்டசபையில் குறிப்பேடு விவகாரம் தொடர்பாக பா.ஜனதா கட்சி நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றது.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் குறிப்பேடு விவகாரம் தொடர்பாக பா.ஜனதா கட்சி நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றது. ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
பா.ஜனதா தர்ணா போராட்டம்கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 15–ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் கர்நாடக பட்ஜெட்டை முதல்–மந்திரி சித்தராமையா தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் மேலிடத்துக்கு பணம் கொடுக்கப்பட்ட விவரங்கள் அடங்கிய குறிப்பேடு(டைரி) விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சி கோரியது. இதை சபாநாயகர் நிராகரித்துவிட்டார். இதையடுத்து சட்டசபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் 2 நாட்கள் தர்ணா போராட்டத்தை நடத்தினர்.
இதையடுத்து 2 நாட்களும் சபை எந்த அலுவலும் நடைபெறாமல் முடங்கியது. இதையடுத்து சபை திங்கட்கிழமைக்கு(அதாவது நேற்று) ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும் பா.ஜனதா உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு, குறிப்பேடு விவகாரம் குறித்த விவாதத்திற்கு அனுமதி வழங்கக் கோரி தர்ணா நடத்தினர்.
தர்ணா வாபஸ் பெறுகிறோம்அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பேசுகையில், “சர்ச்சைக்குள்ளான குறிப்பேடு விவகாரம் குறித்த விவாதத்திற்கு அனுமதி வழங்கக் கோரி நாங்கள் பிடிவாதமாக 2 நாட்கள் தர்ணா நடத்தினோம். இந்த விஷயம் பற்றி விவாதம் நடைபெற வேண்டும். இதற்கு அரசிடம் இருந்து பதில் கிடைக்க வேண்டும். இது தொடர்பாக மக்களிடம் எழுந்துள்ள சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் தர்ணா நடத்தினோம். ஆனால் அரசு பிடிவாதமாக இருப்பதால், சபை நடவடிக்கைகளுக்கு குறுக்கீடு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் நாங்கள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்.
மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதுபற்றியும், பட்ஜெட் குறித்தும் விவாதம் நடைபெற வேண்டும். நாங்கள் எப்போதுமே சபை சுமூகமாக நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம். தேவை இல்லாமல் எப்போதும் நாங்கள் சபையை நடத்தவிடாமல் செய்தது இல்லை. இந்த விஷயத்தை நாங்கள் மக்களிடம் கொண்டு செல்வோம். மக்கள் இதுபற்றி தீர்மானிப்பார்கள்“ என்றார்.
வறட்சி குறித்து விவாதிக்க...அப்போது பேசிய சபாநாயகர் கே.பி.கோலிவாட், “பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு சபையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாநிலத்தில் தீவிரமான வறட்சி நிலவுகிறது. இதுபற்றி விவாதம் நடைபெற வேண்டும். பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். இதற்கு பா.ஜனதா வாய்ப்பு அளிக்க வேண்டும். இதன் மூலம் இந்த நாட்டிற்கே முன்மாதிரியாக கர்நாடகம் திகழ வேண்டும்“ என்றார்.
மீண்டும் குறுக்கிட்டு பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், “கர்நாடகத்தில் நிலவும் கடும் வறட்சி குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக நாங்கள் அனுமதி கேட்டு உங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும். வறட்சியால் மக்கள், குறிப்பாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்“ என்றார்.
பிரசாரத்திற்காக...அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்–மந்திரி சித்தராமையா, “மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் பா.ஜனதாவினருக்கு அக்கறை இல்லை. வெறும் பிரசாரத்திற்காக சபையில் தர்ணா நடத்துகிறார்கள். போலி குறிப்பேடு தகவல்களை வைத்து கொண்டு அரசியல் ஆதாயம் தேட அவர்கள் முயற்சி செய்கிறார்கள். சபை நேரத்தை வீணடிக்கிறார்கள். குறிப்பேடு தகவல்கள் அடிப்படையில் வழக்கு தொடுக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக கூறியுள்ளது. ஆயினும் பா.ஜனதாவினர் தர்ணா நடத்தினார்கள். மக்கள் குறை கூற தொடங்கியதால் பா.ஜனதாவினர் தர்ணாவை வாபஸ் பெற்றுள்ளனர்.
கர்நாடகத்தில் கொள்ளையடித்தவர்கள் பா.ஜனதாவினர். லட்சக்கணக்கான கோடி ரூபாய் கொள்ளையடித்து உள்ளனர். கர்நாடகத்தை முன்னேற்றம் அடைய விடாமல் கெடுத்தனர். ஜெகதீஷ் ஷெட்டர் ஊழல் செய்துள்ளார் என்று அப்போது கர்நாடக ஜனதா கட்சி தொடங்கி இருந்த எடியூரப்பா குற்றம் சாட்டினார். ஆனால் இப்போது பா.ஜனதா தலைவர்களின் பேச்சு, பேய் வாயில் பகவத் கீதையை கேட்பது போல் உள்ளது. இவர்களுக்கு மானம், மரியாதை எதுவும் இல்லை“ என்றார்.
சபையில் கடும் அமளிசித்தராமையாவின் இந்த பேச்சுக்கு பா.ஜனதா உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். பதிலுக்கு ஆளும் காங்கிரஸ் உறுப்பினர்களும் எழுந்து குரலை உயர்த்தி பேசினர். ஒரே நேரத்தில் இரு தரப்பினரும் பேசிக்கொண்டனர். இதனால் சபையில் யார் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாத நிலை ஏற்பட்டது.
இரு கட்சிகளின் உறுப்பினர்களும் கூச்சல்–குழப்பத்தில் ஈடுபட்டதால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது சபாநாயகர் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினார். அதைத்தொடர்ந்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.