குண்டலுபேட்டை தொகுதி வேட்புமனு தாக்கலின் போது பா.ஜனதா–காங். தொண்டர்கள் மோதல் போலீஸ் தடியடி–பதற்றம்


குண்டலுபேட்டை தொகுதி வேட்புமனு தாக்கலின் போது பா.ஜனதா–காங். தொண்டர்கள் மோதல் போலீஸ் தடியடி–பதற்றம்
x
தினத்தந்தி 21 March 2017 3:36 AM IST (Updated: 21 March 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

குண்டலுபேட்டை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

கொள்ளேகால்

குண்டலுபேட்டை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அப்போது பா.ஜனதா–காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கல்வீசி தாக்கிக் கொண்டனர். அவர்களை, போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் அங்கு பதற்றம் நிலவுவதால் அதிவிரைவுப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இடைத்தேர்தல்

முதல்–மந்திரி சித்தராமையாவின் மந்திரி சபையில் இடம்பெற்று இருந்த மந்திரி மகாதேவ பிரசாத் சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார்.

இதையடுத்து குண்டலுபேட்டை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம்(ஏப்ரல்) 9–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் குண்டலுபேட்டை தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக மரணம் அடைந்த மந்திரி மகாதேவ பிரசாத்தின் மனைவி கீதா மகாதேவ பிரசாத் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரை ஆதரித்து முதல்–மந்திரி சித்தராமையா உள்பட காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பலர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பா.ஜனதா–காங்கிரஸ் நேரடி போட்டி

இந்த நிலையில் குண்டலுபேட்டை தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக நிரஞ்சன் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து முன்னாள் முதல்–மந்திரியும், பா.ஜனதா கட்சியின் மாநில தலைவருமான எடியூரப்பா, ஷோபா எம்.பி. மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் குண்டலுபேட்டை தொகுதியில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேரடி போட்டியில் இறங்கியுள்ள இவ்விரு கட்சிகளின் வேட்பாளர்களும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்வதாக இருந்தனர். அதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

வேட்புமனு தாக்கல்

அதன்படி நேற்று பா.ஜனதா வேட்பாளர் நிரஞ்சன்குமார் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக குண்டலுபேட்டை தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா மற்றும் ஏராளமான தொண்டர்கள் வந்தனர். அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு காங்கிரஸ் வேட்பாளர் கீதா மகாதேவ பிரசாத்தும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அவருடன் மந்திரி யு.டி.காதர் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் வந்தனர். இதையடுத்து கீதா மகாதேவ பிரசாத்தும் வேட்புமனு தாக்கல் செய்ய தாசில்தார் அலுவலகத்திற்குள் சென்றுவிட்டார்.

கல்வீச்சு

இந்த நிலையில் தாசில்தார் அலுவலகத்தின் வெளியே கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்களும், பா.ஜனதா தொண்டர்களும் எதிர்ப்பு கோ‌ஷங்களை எழுப்பினர். இது சிறிது நேரத்தில் அவர்களுக்கு இடையே மோதலாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் கல்வீசி தாக்கிக் கொண்டனர். மேலும் தாசில்தார் அலுவலகத்தின் மீதும் கல்வீச்சு நடைபெற்றது.

இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். ஆனால் அவர்கள் சமாதானம் அடைவில்லை. மாறாக மேலும் மோதல் முற்றியது. ஒருவருக்கொருவர் கற்களைவீசி தாக்கிக் கொண்டனர்.

தடியடி

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குல்தீப் குமார் ஜெயினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குல்தீப் குமார் ஜெயின், போலீஸ் படையுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்தார். ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை.

இதையடுத்து அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அதன்பேரில் அங்கு கூடியிருந்த பா.ஜனதா தொண்டர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் நாலாபுறமும் சிதறி ஓடினர். தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக குண்டலுபேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் குவிப்பு

இதற்கிடையே பா.ஜனதா வேட்பாளர் நிரஞ்சன்குமார், எடியூரப்பா முன்னிலையிலும், காங்கிரஸ் வேட்பாளர் கீதா மகாதேவ பிரசாத், மந்திரி யு.டி.காதர் முன்னிலையிலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். பின்னர் அவர்கள் தாசில்தார் அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தனர்.

அப்போதுதான் அவர்களுக்கு வெளியே தொண்டர்களுக்கு இடையே நடந்த மோதல் சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து எடியூரப்பா பா.ஜனதா தொண்டர்களையும், யு.டி.காதர் காங்கிரஸ் தொண்டர்களையும் சமாதானப்படுத்தினர். பின்னர் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த இடத்தில் பா.ஜனதா–காங்கிரஸ் தொண்டர்கள் இடையே நடந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி அங்கு அதிவிரைவுப்படை மற்றும் ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story