ஆன்–லைன் வர்த்தகம் தமிழக கலாசாரத்தை சீரழிக்கிறது வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் பேட்டி


ஆன்–லைன் வர்த்தகம் தமிழக கலாசாரத்தை சீரழிக்கிறது வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 21 March 2017 4:00 AM IST (Updated: 21 March 2017 3:39 AM IST)
t-max-icont-min-icon

ஆன்–லைன் வர்த்தகம் தமிழக கலாசாரத்தை சீரழிக்கிறது என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

ஈரோடு,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 34–வது மாநில மாநாடு வருகிற மே மாதம் 5–ந் தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டமும், கனிராவுத்தர்குளம் பெரியசேமூர் அனைத்து வணிகர்கள் சங்க ஆண்டு விழா கூட்டமும் ஈரோடு கனிராவுத்தர்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் கவுரவ தலைவர் தேவதாஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்ட தலைவர் ஆர்.எம்.தேவராஜா, செயலாளர் ஆர்.கே.சண்முகவேல், பொருளாளர் கே.ராஜகோபால், துணைத்தலைவரும், தாமிரபரணி எலக்ட்ரானிக்ஸ் ஷோரூம் உரிமையாளருமான பொன்.நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்துகொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

சரக்கு சேவை வரி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு விழுப்புரத்தில் வருகிற மே மாதம் 5–ந் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில் 15 லட்சம் வணிகர்கள் கலந்துகொள்வார்கள். ஈரோடு மாவட்டத்தில் இருந்து 15 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்தது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு சேவை வரி சட்டம் மூலம் சாமானிய வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். 5 ஆண்டுகளில் 5 லட்சம் சிறு வணிகர்கள் காணாமல் சென்றுவிடுவார்கள். இதுதொடர்பாக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

வெளிநாட்டு குளிர்பானம்

கோக்–பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை 70 சதவீதத்திற்கு மேல் குறைந்து உள்ளது. பல ஊர்களில் வெளிநாட்டு குளிர்பானங்கள் இல்லாதநிலை உருவாகி உள்ளது. பொதுமக்களும் வெளிநாட்டு குளிர்பானங்களை தவிர்க்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் நாங்கள் கடையடைப்பு போராட்டத்தை அதிகமாக நடத்தியதில்லை. அப்துல்கலாம் மறைவு, காவிரிஆறு பிரச்சினை, ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகிய 3 முறை மட்டுமே கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. வருகிற மே மாதம் நடைபெற உள்ள மாநாட்டிற்கு வணிகர்கள் கடைகளை அடைத்துவிட்டு செல்வார்கள். விவசாயிகள் போராட்டத்திற்கு எங்களிடம் ஆதரவு கேட்டால் ஆட்சிமன்ற குழுவை கூட்டி முடிவு எடுக்கப்படும்.

ஆன்–லைன் வர்த்தகம்

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கிடையாது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறிஇருந்தார். ஆனால் அவர் அந்த வாக்குறுதியை மறந்துவிட்டார். ஆன்–லைன் வர்த்தகத்தில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் பொருட்களை விற்பனை செய்கின்றன.

குறிப்பாக டாக்டர்களின் சீட்டு இல்லாமல் விதிமுறையை மீறி ஆன்–லைனில் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த நடைமுறை தமிழக கலாசார சீரழிவை ஏற்படுத்துகிறது. பெண்கள், கல்லூரி மாணவிகள் தவறாக பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. எனவே ஆன்–லைன் வர்த்தகத்திற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும்.

இடைத்தேர்தல்

இடைத்தேர்தலினால் ஆர்.கே.நகர் தொகுதியில் அடைமழை (பணப்புழக்கம்) பெய்கிறது. தமிழக அரசியல் சூழ்நிலை அசாதாரண நிலையில் உள்ளது. குடிநீர் போன்ற அடிப்படை பிரச்சினைகளை பொதுமக்கள் புரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் பணத்துக்காக ஓட்டை விற்பனை செய்துவிடக்கூடாது.

இவ்வாறு ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.

கூட்டத்தில், கனிராவுரத்தர் பெரியசேமூர் அனைத்து வணிகர் சங்க உறுப்பினர்கள் 66 பேருக்கு பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கரமராஜா அடையாள அட்டைகளை வழங்கினார். இதில் சங்கத்தின் செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் அருள்ராஜ், ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ்ரமேஷ் உள்பட வணிகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் நம்பியூரிலும், நசியனூரிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


Next Story