அடிப்படை வசதி செய்து தரக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
ஊரணி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மரக்காணம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் ஊரணி கிராமத்தில் 200–க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர் வசிக்கின்றனர். இங்கு குடிநீர், சாலை, மின்வசதி உள்பட அடிப்படை வசதிகள் இல்லை என்றும், 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த 100–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அங்குள்ள ஊராட்சிமன்ற அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பேச்சுவார்த்தைஇதுபற்றி தகவல் அறிந்த மரக்காணம் தாசில்தார் மனோகரன், வருவாய் ஆய்வாளர் மோகனப்பிரியா ஆகியோர் ஊரணி கிராமத்துக்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி அளித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.