ஜல்காவில் கணவர், மனைவி, 2 குழந்தைகள் கொன்று ரூ.4 லட்சம் கொள்ளை
ஜல்காவில் கணவர், மனைவி, 2 குழந்தைகளை படுகொலை செய்து ரூ.4 லட்சத்தை கொள்ளையடிக்க சென்ற சம்பவம் நடந்து உள்ளது.
புனே,
ஜல்காவில் கணவர், மனைவி, 2 குழந்தைகளை படுகொலை செய்து ரூ.4 லட்சத்தை கொள்ளையடிக்க சென்ற பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.
4 பேர் கொலைஜல்காவ் மாவட்டத்தில் உள்ள பாதளிகாவ் கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் சுரேஷ் (வயது 42), இவரது மனைவி சங்கீதா (35), இந்த தம்பதிக்கு திவ்யா (9) என்ற மகளும், சேத்தன் (5) என்ற மகனும் இருந்தனர்.
நேற்று அதிகாலை இவர்களது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் பிரதீஷ் சுரேஷ், சங்கீதா, திவ்யா, சேத்தன் ஆகிய 4 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். இதுபற்றி உடனே அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நான்கு பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கல்லால் தாக்கி...அவர்கள் நான்கு பேரும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டும், தலையில் கல்லால் அடித்தும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
தடயவியல் நிபுணர்கள் வந்து கைரேகை சோதனை நடத்தினர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தான் பிரதீப் சுரேஷ் அங்குள்ள தனக்கு சொந்தமான நிலத்தை ரூ.4 லட்சத்திற்கு விற்பனை செய்து அந்த பணத்தை வீட்டில் வைத்திருந்து உள்ளார்.
போலீசார் நடத்திய சோதனையின் போது அந்த பணம் வீட்டில் இல்லை. வீட்டில் உள்ள பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.
இதன் மூலம் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வீட்டுக்குள் புகுந்தவர்கள் நான்கு பேரையும் கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பாதளிகாவ் கிராமமே சோகத்தில் மூழ்கியது.