உலக சிட்டுக்குருவி தினம்: பறவைகளை பாதுகாக்க வேண்டும் கலெக்டர் பேச்சு
வனத்துறை சார்பில் உலக சிட்டுக்குருவி தின நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் வனத்துறை சார்பில் உலக சிட்டுக்குருவி தின நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். மண்டல வனப்பாதுகாவலர் நாகநாதன் முன்னிலை வகித்தார். சிட்டுக்குருவிகள் வீடுகளில் வசிப்பதற்காக, பள்ளி மாணவர்களுக்கு மண்குடுவைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் டி.ஜி.வினய் பேசும்போது, ‘திண்டுக்கல் மாவட்டம் வனம் மற்றும் விவசாய நிலம் சார்ந்த பகுதிகளை அதிகம் கொண்டு உள்ளது. இங்கு சுமார் 250 வகையான பறவையினங்கள் வசிக்கின்றன. இவற்றில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் அவற்றை காணமுடிவதில்லை. கிராமப்புறங்களில் மட்டும் பார்க்க முடிகிறது. இவற்றை அதிகரிக்கும் வகையில், அவை வீடுகளில் கூடு கட்டுவதற்கு ஏதுவாக செயற்கை கூடுகள் வைக்க வேண்டும். பறவைகளை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இதற்காக அதிக மரங்களை வளர்க்க வேண்டும்’ என்றார்.
இதில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் மற்றும் வனத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.