மலைப்பகுதியில் இந்திய புவி அமைப்பியல் துறையினர் ஆய்வு செய்ய எதிர்ப்பு 10 கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
மலைப்பகுதியில் இந்திய புவி அமைப்பியல் துறையினர் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் டி.ஜி.வினயிடம் 10 கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட தேவிநாயக்கன்பட்டி, தலையுத்துபட்டி, நல்லபொம்மன்பட்டி, கணவாய்பட்டி, வலையபட்டி, கன்னிமார்பாளையம், தாசரிபட்டி, சுக்காம்பட்டி, குட்டம், கரட்டுப்பட்டி ஆகிய 10 கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சார்பில் கலெக்டர் டி.ஜி.வினயிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:–
கன்னிமார்பாளையத்திற்கு மேற்கே அமைந்துள்ள கருமலை மற்றும் ரெங்கமலை சுற்றுப்பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த பகுதியில் வெங்காயம் நன்றாக விளையும். மேற்கண்ட கிராம மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
ஆய்வை நிறுத்த கோரிக்கைஇந்தநிலையில், கடந்த 6 மாதங்களாக கருமலை அடிவாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய புவி அமைப்பியல் துறை சார்பாக நிலத்தடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பட்டா நிலங்களிலும் ஆய்வு செய்து, 500 மீட்டர் இடைவெளியில் கற்கள் நட்டுள்ளனர். எங்கள் நிலத்தின் அடியில் செம்பு, காரியம், துத்தநாகம் போன்ற கனிமவளங்கள் இருப்பதாக தெரிகிறது. இதனை எடுப்பதற்காக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதற்காக ஆழ்துளை கிணறுகள் அமைத்து சோதனை செய்யப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே ஆய்வுகளை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை
கனிமவளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இந்தியா முழுவதும் பூமிக்கு அடியில் என்னென்ன வளங்கள் உள்ளன என்பதை ஆய்வு செய்வதே இந்திய புவி அமைப்பியல் துறையினரின் வேலையாகும். இவர்கள் நாடுமுழுவதும் சென்று ஆய்வு நடத்தி பதிவு செய்து வருகிறார்கள். அதன்படி குட்டம் பகுதியில் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்காக சிறிய அளவிலான ஆழ்துளை கிணறுகள் அமைத்து மாதிரிகள் எடுப்பார்கள். ஆய்வு முடிந்தவுடன் சென்று விடுவார்கள். மற்றபடி கனிம வளங்களை எடுக்கும் உரிமை இவர்களுக்கு இல்லை. எனவே பொதுமக்கள் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துடன் இதனை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். இது குறித்து அச்சப்பட தேவையில்லை’ என்றனர்.