மும்பை உள்பட மாநிலம் முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம்
மும்பை உள்பட மாநிலம் முழுவதும் டாக்டர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.
மும்பை,
மும்பை உள்பட மாநிலம் முழுவதும் டாக்டர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.
டாக்டர்கள் மீது தாக்குதல்துலே மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி பயிற்சி டாக்டர் சமீபத்தில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த நோயாளியின் உறவினர்களால் தாக்கப்பட்டார். இதன் பிறகு நாசிக்கில் டாக்டர், நர்சு ஒருவர் உயிரிழந்த நோயாளியின் உறவினர்களால் தாக்கப்பட்டனர். இதற்கு டாக்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் தாக்குதல் சம்பவங்கள் நடந்த சுவடு மறைவதற்குள் கடந்த சனிக்கிழமை இரவு சயான் மாநகராட்சி ஆஸ்பத்திரியில் ரோகித் குமார் என்ற பயிற்சி டாக்டர் உயிரிழந்த பெண் நோயாளியின் உறவினர்களால் தாக்கப்பட்டார். இது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாநிலத்தில் டாக்டர்கள் தாக்கப்படும் 3–வது சம்பவம் இதுவாகும்.
டாக்டர்கள் வேலை நிறுத்தம்தொடர்ந்து டாக்டர்கள் தாக்கப்படுவது மாநிலம் முழுவதும் உள்ள டாக்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டிந்து சயான் டாக்டர்கள் நேற்று முன்தினமே வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் டாக்டர்கள் தாக்கப்படுவதை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் 18 மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த 4 ஆயிரம் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பையில் மட்டும் சயான், கே.இ.எம்., நாயர், ஜே.ஜே. மற்றும் கூப்பர் ஆஸ்பத்திரிகளை சேர்ந்த 2 ஆயிரம் டாக்டர் மற்றும் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது டாக்டர்கள் ‘நாங்களும் மனிதர்கள் தான், தேவதைகளோ, வித்தைக்காரர்களோ அல்ல’ போன்ற பதாகைகளை வைத்திருந்தனர்.
நோயாளிகள் கடும் அவதிடாக்டர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தால் மும்பையில் உள்ள 5 மாநகராட்சி, அரசு ஆஸ்பத்திரிகளிலும் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டது. இதன்காரணமாக வெளியூர்களில் இருந்து சிகிச்சைக்காக வந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். நேற்று நடைபெற இருந்த சுமார் 500–க்கும் அதிகமான அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மகனை அழைத்து வந்த தந்தை கூறும்போது:–
நான் பிவண்டியில் இருந்து எனது மகனை சிகிச்சைக்காக அழைத்து வந்தேன். அவனால் நடக்க முடியாது. தூக்கிக்கொண்டு தான் வரவேண்டும். ஆனால் இன்று சிகிச்சை அளிக்க முடியாது என கூறிவிட்டனர். நாளையும் ஆஸ்பத்திரி செயல்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. நோயாளிகளின் நலன் கருதி டாக்டர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவசரகால சிகிச்சைபோராட்டம் குறித்து மாநகராட்சி ஆஸ்பத்திரிகளின் இயக்குனர் அவினாஷ் சுபே கூறுகையில், ‘‘அவசர கால மருந்துகள் தடையின்றி கிடைக்க உறுதி செய்துள்ளோம். நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பிவர தேவையான முயற்சிகளை செய்து வருகிறோம்’’ என்றார்.
ஜே.ஜே.ஆஸ்பத்திரி டீன் லகானே கூறும்போது, ‘‘மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், துறை தலைவர்களை 24 மணிநேரமும் பணியில் ஈடுபடுத்தி உள்ளோம். அவசர கால அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன’’ என்றார்.
மேயருடன் சந்திப்புஇந்தநிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர் பிரதிநிதிகள் இதுதொடர்பாக நேற்று மேயர் விஸ்வநாத் மகாதேஸ்வரை சந்தித்து பேசினர். அப்போது மேயர், ஏப்ரல் 1–ந்தேதி முதல் மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 300 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். உரிய அடையாள அட்டை பெற்ற நோயாளியின் உறவினர்கள் மட்டுமே ஆஸ்பத்திரி உள்ளே வர அனுமதிக்கப்படுவார்கள் போன்ற வாக்குறுதிகளை அளித்தார்.
எனினும் மேயரின் வாக்குறுதிகள் பயிற்சி டாக்டர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே டாக்டர்களின் போராட்டம் தொடரும் என தகவல்கள் கூறுகின்றன.