தென்காசியில் குடிநீர் குழாய்களில் தண்ணீர் உறிஞ்சிய 45 மோட்டார்கள் பறிமுதல் நகரசபை அதிகாரிகள் நடவடிக்கை
தென்காசியில் குடிநீர் குழாய்களில் தண்ணீரை உறிஞ்சிய 45 மோட்டார்களை பறிமுதல் செய்து நகர சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தென்காசி,
தென்காசியில் குடிநீர் குழாய்களில் தண்ணீரை உறிஞ்சிய 45 மோட்டார்களை பறிமுதல் செய்து நகர சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குடிநீர் தட்டுப்பாடுதென்காசி நகரில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. பெரும்பாலான இடங்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. மழை இல்லாத காரணத்தினால் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. இந்தநிலையில் பல வீடுகளில் குடிநீர் குழாய்களில் மோட்டார்களை வைத்து தண்ணீர் உறிஞ்சப்படுவதாக நகரசபை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுபோன்று மோட்டார்கள் வைத்து தண்ணீரை எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகரசபை ஆணையாளர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதன் பின்னரும் பல வீடுகளில் இவ்வாறு இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து நகரசபை ஆணையாளர் ஏகராஜ், என்ஜினீயர் தங்கபாண்டியன், உதவி என்ஜினீயர் ஜெய பிரியா மற்றும் போலீசாருடன் வீடுகளில் குடிநீர் குழாய்களை ஆய்வு செய்தனர்.
மோட்டார்கள் பறிமுதல்சுமார் 10 நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையில் 45 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை பொருத்தி இருந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. உரிய காரணங்கள் கூறாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்படும் என்றும் பொதுமக்கள் அனைவருக்கும் சீராக குடிநீர் கிடைக்க நகரசபை நிர்வாகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.