கோவில்பட்டியில் வக்கீலுக்கு பட்டாக்கத்தி வெட்டு 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு


கோவில்பட்டியில் வக்கீலுக்கு பட்டாக்கத்தி வெட்டு 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 22 March 2017 2:15 AM IST (Updated: 21 March 2017 8:52 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் வக்கீலை பட்டாக்கத்தியால் வெட்டியது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் வக்கீலை பட்டாக்கத்தியால் வெட்டியது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஐகோர்ட்டு வக்கீல்

கோவில்பட்டி நடராஜபுரம் 6–வது தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் சரவணன் (வயது 30). இவர் மதுரை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் செல்வராஜிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது.

கோவில்பட்டி அருகே பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர் செல்வராஜின் வணிக வளாகத்தை ரூ.1 கோடியே 27 லட்சத்துக்கு வாங்க விலை பேசினார். பணப்புழக்கம் தட்டுப்பாடு காரணமாக ரமேஷ் ரூ.91 லட்சத்தை செல்வராஜிடம் வழங்கி, வணிக வளாகத்தை பத்திர பதிவு செய்தார். மீதி ரூ.36 லட்சத்தை ரமேஷ் சில நாட்களில் தருவதாக கூறினார். ஆனால் மீதி பணத்தை தராததால், செல்வராஜ் வணிக வளாகத்தை பூட்டு போட்டு பூட்டினார்.

பட்டாக்கத்தி வெட்டு

நேற்று ரமேஷ், அவருடைய நண்பர்களான சுந்தர்ராஜன் (40), சீனிவாசன் (45) உள்ளிட்டவர்கள் வணிக வளாகத்தின் பூட்டை உடைத்துக் கொண்டிருந்தனர். உடனே சரவணன் தன்னுடைய நண்பர்களான வக்கீல்கள் உத்திரகுமார், நவாப் ஆகியோருடன் சென்று தட்டி கேட்டார். அப்போது ரமேஷ் பட்டாக்கத்தியால் சரவணனின் இடது கையில் வெட்டினார். பலத்த காயம் அடைந்த சரவணனுக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ரமேஷ், சுந்தர்ராஜன், சீனிவாசன் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.


Next Story