அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் குறித்து விவாதம் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் தர்ணா–கடும் அமளி சபை ஒத்திவைக்கப்பட்டது
அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் குறித்த விவாதத்தின்போது சட்டசபையில் எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டம் நடத்தின. இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 5–வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள், அங்கன்வாடி ஊழியர்கள் பகல்–இரவாக பெங்களூருவில் தர்ணா போராட்டம் நடத்தி வருவது குறித்து விவாதிக்க அனுமதி வழங்குமாறு வலியுறுத்தினர்.
அதைத்தொடர்ந்து விதி எண் 69–ன் கீழ் இதுபற்றிய விவாதத்திற்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார். இதில் எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், ஜனதா தளம்(எஸ்) குழு தலைவர் குமாரசாமி உள்பட பல்வேறு உறுப்பினர்கள் அங்கன்வாடி ஊழியர்களின் கஷ்டங்கள் குறித்து பேசினர். அவர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சித்தராமையா பதில்இந்த விவாதத்திற்கு சித்தராமையா பதில் அளிக்கையில், “அங்கன்வாடி மையங்கள் திறக்க ஐ.சி.டி.எஸ். திட்டத்தை 1975–ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. அப்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க மத்திய அரசு 90 சதவீதமும், மாநில அரசு 10 சதவீதமும் வழங்கியது. ஆனால் இப்போது மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு கடந்த ஆண்டு இந்த உதவியை 60–க்கு 40 என்ற விகிதத்தில் குறைத்துவிட்டது. அதாவது மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி உதவியை பகிர்ந்து அளிக்க வேண்டும். மத்திய அரசுக்கு பெண்களின் நலனிலும், குழந்தைகளின் நலனிலும் அக்கறை இல்லை‘‘ என்று மத்திய அரசை கடுமையாக குறை கூறி பேசினார்.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் எழுந்து நின்று, மத்திய அரசை விமர்சித்து பேசிய சித்தராமையாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசுகையில், “மத்திய அரசை குறை கூறுவதையே சித்தராமையா வாடிக்கையாக வைத்துள்ளார். 14–வது நிதி குழுவில் கர்நாடகத்திற்கு மத்திய அரசு ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அதை பற்றி அவர் இங்கே சொல்ல வேண்டும். கர்நாடகத்திற்கு வழங்கப்படும் நிதியை மோடி தலைமையிலான மத்திய அரசு உயர்த்தியுள்ளது“ என்றார்.
கடுமையான வாக்குவாதம்அப்போது மீண்டும் பேசிய சித்தராமையா, “கர்நாடகத்தில் இருந்து மத்திய அரசுக்கு வருமான வரி உள்பட பல்வேறு வரிகள் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செல்கிறது. மத்திய அரசு தனது சொந்த பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து கர்நாடகத்திற்கு கொடுப்பது இல்லை. கர்நாடக மக்கள் வரியாக செலுத்தும் பணத்தை தான் மத்திய அரசு திரும்ப கர்நாடகத்திற்கு உதவியாக கொடுக்கிறது“ என்று ஜெகதீஷ் ஷெட்டரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார்.
அப்போது காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா உறுப்பினர்கள் எழுந்து நின்று, குரலை உயர்த்தி சத்தமாக பேசினர். இதில் யார் என்ன பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. அப்போது சித்தராமையாவுக்கும், ஜெகதீஷ் ஷெட்டருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. சித்தராமையா மத்திய அரசை கடுமையாக குறை கூறி பேசினார். பதிலுக்கு ஜெகதீஷ் ஷெட்டர் மாநில அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார். சித்தராமையாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்களும், ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஆதரவாக பா.ஜனதா உறுப்பினர்களும் எழுந்து நின்று கூச்சலிட்டனர். இதனால் சபையில் கூச்சல்–குழப்பம் நிலவியது. கடும் அமளி உண்டானது.
தர்ணா நடத்தினர்அப்போது ஜனதா தளம்(எஸ்) கட்சி உறுப்பினர்கள், அங்கன்வாடி ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிடுமாறு வலியுறுத்தி சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா நடத்தினர். அதைத்தொடர்ந்து பா.ஜனதா உறுப்பினர்களும் தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இருக்கைக்கு திரும்பும்படி தர்ணா நடத்திய உறுப்பினர்களுக்கு சபாநாயகர் கே.பி.கோலிவாட் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தை கைவிடவில்லை. இதையடுத்து சபையை மதியம் 2.30 மணிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
அதன்படி சபை மீண்டும் உணவு இடைவேளைக்கு பிறகு கூடியது. அப்போது பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி உறுப்பினர்கள் தங்களின் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், “நாங்கள் ஆட்சியில் இருந்தபோது அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளத்தில் ரூ.700 உயர்த்தி வழங்கினோம். ஆனால் சித்தராமையா பேசும்போது, பா.ஜனதா ஆட்சியில் அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படவே இல்லை என்று பொய் சொல்கிறார். ஒரு முதல்–மந்திரி இவ்வாறு பொய் பேசலாமா?“ என்றார்.
இது அரசியல் சதிஇதற்கு பதில் அளித்த சித்தராமையா, “நான் பேசும்போது பா.ஜனதா ஆட்சியில் அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.700 உயர்த்தப்பட்டது என்று தான் கூறினேன். இது பா.ஜனதாவினரின் காதுகளில் விழவில்லை. சபையின் நேரத்தை வீணடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பா.ஜனதாவினர் செயல்படுகிறார்கள். இது அரசியல் சதி. மக்கள் பிரச்சினைகளில் பா.ஜனதாவினருக்கு அக்கறை இல்லை“ என்றார்.
அப்போது ஜனதா தளம்(எஸ்) குமாரசாமி பேசுகையில், “இது முக்கியமான பிரச்சினை. அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும். இந்த விஷயத்தில் மாநில அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக அரசு சொல்கிறது. ஆனால் போராட்டம் நடத்தும் அங்கன்வாடி ஊழியர்கள் என்னிடம் பேசினர். அவர்கள் இன்னும் போராட்ட களத்தில் தான் இருக்கிறார்கள்“ என்றார்.