கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி படுகொலை
மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயியை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
கோவில்பட்டி,
மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயியை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயிதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புதுப்பட்டி மேலத்தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 57). விவசாயியான இவர் பணம் கொடுக்கல், வாங்கல் தொழிலும் செய்து வந்தார். அவருக்கு சொந்தமான தோட்டம் அந்த பகுதியில் உள்ளது.
நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் சுப்புராஜ் தனது தோட்டத்தில் வேலை செய்வதற்கு ஆட்களை அழைப்பதற்காக, மோட்டார் சைக்கிளில் பக்கத்து ஊரான பரசுராமபுரத்துக்கு சென்றார்.
புதுப்பட்டி கல்குவாரி அருகில் சென்றபோது, அங்கு வந்த மர்ம கும்பல் திடீரென்று சுப்புராஜின் மோட்டார் சைக்கிளை வழிமறித்ததது. சுப்புராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். தலை, கழுத்து, தோள்பட்டை, கைகள் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சுப்புராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
வலைவீச்சுபின்னர் காலையில் அந்த வழியாக சென்றவர்கள், சுப்புராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கொப்பம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்– இன்ஸ்பெக்டர் தாமரைசெல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சுப்புராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுப்புராஜ் கொலையில் தொடர்புடைய கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.
காரணம் என்ன?பணம் கொடுக்கல்– வாங்கலில் ஏற்பட்ட முன்விரோதத்தில் சுப்புராஜை மர்மநபர்கள் கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
கொலை செய்யப்பட்ட சுப்புராஜிக்கு மகாலட்சுமி (49) என்ற மனைவியும், அழகு பாண்டியன் (30) என்ற மகனும், கற்பகம், ருக்மணி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயியை மர்மநபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.