முறைகேடுகளில் ஈடுபட்டதாக 5 ரே‌ஷன்கடை விற்பனையாளர்கள் தற்காலிக பணி நீக்கம்


முறைகேடுகளில் ஈடுபட்டதாக 5 ரே‌ஷன்கடை விற்பனையாளர்கள் தற்காலிக பணி நீக்கம்
x
தினத்தந்தி 1 April 2017 3:45 AM IST (Updated: 31 March 2017 6:51 PM IST)
t-max-icont-min-icon

அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 5 ரே‌ஷன்கடை

ராமநாதபுரம்,

தமிழகத்தில் முதல்–அமைச்சர் ஆணைக்கிணங்க மாதந்தோறும் நியாய விலை கடைகளில் விலையில்லா அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களான சர்க்கரை, கோதுமை, மண்எண்ணெய் போன்றவை குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நியாய விலைக்கடையை வேலை நேரத்தில் திறக்காமல் இருப்பது, அத்தியாவசிய பொருட்கள் இருப்பு குறைவாக வைத்திருப்பது, குடும்ப அட்டைக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் போலி வினியோகம் செய்வது உள்ளிட்ட புகார்கள் மாவட்ட கலெக்டருக்கு வந்தது. இதைத்தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின்பேரில் மண்டல இணைப்பதிவாளர், துணைப்பதிவாளர் (பொது வினியோக திட்டம்) மற்றும் கள அலுவலர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ரே‌ஷன்கடை விற்பனையாளர்கள் அரசூர் ராஜேந்திரன், கொண்டுநல்லான்பட்டி ஞானப்பிரகாசம், எஸ்.தரைக்குடி வேலுச்சாமி, செவல்பட்டி கிருஷ்ணசாமி, வில்லானேந்தல் காளிமுத்து ஆகிய 5 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், விற்பனையாளர்களிடம் இருந்து ரூ.67,700 அபராதம் வசூலிக்கப்பட்டது.

எச்சரிக்கை

இந்தநிலையில் இருப்பு குறைவு மற்றும் போலி பில் வினியோகம், நியாய விலைக்கடையை வேலை நேரத்தில் திறக்காமல் இருப்பது, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்காமல், பொருட்கள் வழங்கியதாக எஸ்.எம்.எஸ். வருவதாக புகார்கள் கண்டறியப்பட்டால் விற்பனையாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், கிரிமினல் வழக்கும் தொடரப்படும் என கலெக்டர் நடராஜன் எச்சரித்துள்ளார். மேலும் பொதுமக்கள் பொது வினியோகத் திட்டம் தொடர்பான புகார் தெரிவிக்க மாவட்ட வழங்கல் அலுவலர் 94450 00362, 04567–230056, துணைப்பதிவாளர் (பொது வினியோகத் திட்டம்) 73387 21604, 04567–230950 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story