உதவித்தொகை வாங்கித்தருவதாக 2 பேரிடம் நகையை அபேஸ் செய்த பெண் கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினாள்
சாத்தூரில் முதியோர் உதவித்தொகை பெற்றுத்தருவதாக கூறி 2 பெண்களிடம் நகையை
சாத்தூர்,
சாத்தூர் அருகிலுள்ள அய்யம்பட்டியை சேர்ந்தவர் சீதாலட்சுமி(வயது56). இவரை கடந்த 14–ந் தேதி 50 வயது மதிக்கத்தக்க பெண் அணுகி, உங்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவு வந்துள்ளது, என்னுடன் தாலுகா ஆபீசுக்கு வாருங்கள், என்று அழைத்துள்ளாள். அவளது பேச்சை நம்பிய சீதாலட்சுமி ஒரு ஆட்டோவில் சாத்தூர் வந்துள்ளார். பங்களா தெரு பகுதிக்கு வந்ததும் ஆட்டோவை விட்டு இருவரும் இறங்கியுள்ளார்கள். அங்குள்ள ஒரு வீட்டினை அடையாளம் காட்டி அங்குள்ள ஆபீசுக்கு சென்று உதவித்தொகைக்கு ஆர்டர் வாங்க வேண்டும் என்று அந்தப்பெண் கூறியுள்ளாள்.
மேலும் நகை அணிந்து சென்றால் தொகை கிடைக்காது என்று கூறி சீதாலட்சுமி அணிந்திருந்த 3 பவுன் நகைகையை கேட்டு வாங்கி இருக்கிறாள். பின்னர் அங்கிருந்து நைசாக நழுவி விட்டாள். நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த சீதாலட்சுமி இது குறித்து சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மீண்டும்இந்த நிலையில் கடந்த 30– ந்தேதி சாத்தூர் மேல காந்திநகரில் அய்யம்மாள்(55) என்பவரிடமும் இதே போல 2 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது. வீட்டில் இருந்து நைசாக பேசி அழைத்துச்சென்ற பெண், நகை கிடைத்ததும் நழுவி விட்டாள். இந்த புகாரும் சாத்தூர் போலீசாருக்கு வந்தது.
இதனை தொடர்ந்து நகரில் ஆங்காங்கே வைத்துள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் பார்வையிட்டார்கள். அப்போது சீதாலட்சுமியை பங்களா தெரு பகுதிக்கு அழைத்துச்சென்ற பெண்ணின் உருவம் பதிவாகியிருந்தது.
சிக்கினாள்
அதனைக்கொண்டு விசாரணை மேற்கொண்டபோது அந்தப்பெண் நெல்லை மாவட்டம் தாழையூத்து வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே குடியிருக்கும் செல்வராஜ் என்பவரது மனைவி பாப்பாத்தி(53)என்பது தெரியவந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று அவளை கைது செய்தனர். விசாரணையின் போது அய்யம்மாளிடம் நகையை அபேஸ் செய்ததையும் அவள் ஒப்புக்கொண்டாள். இதேபோல பல இடங்களில் கைவரிசை காட்டி இருப்பதும் தெரிய வந்தது. பாப்பாத்தி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டாள்.