தீவட்டிப்பட்டியில் பரபரப்பு: 16 வயது சிறுமி கடத்தல்; இருதரப்பினர் மோதல் 7 பேர் கைது
16 வயது சிறுமியை கடத்தியது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
ஓமலூர்,
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா மூக்கனூர் ஊராட்சி ரெட்டியூர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பெங்களூரு அருகே எலகங்கா என்ற பகுதியில் உள்ள ஜல்லிகிரஷரில் கூலிவேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 19 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்த கிரஷரில் தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டியை சேர்ந்த ஒரு குடும்பத்தினரும் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது 16 வயது மகளை கடந்த 25–ந் தேதி முதல் காணவில்லை.
இதையடுத்து அக்கம் பக்கத்தில் விசாரித்த போது 16 வயது சிறுமியை 19 வயது வாலிபர் கடத்தி சென்று சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே எலத்தூரில் உறவினர் வீட்டில் வைத்து இருப்பது தெரியவந்தது. சிறுமியும், வாலிபரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள்.
இருதரப்பினர் மோதல்இதைத்தொடர்ந்து சிறுமியின் உறவினர்கள் தாரமங்கலம் அருகே உள்ள அரியாம்பட்டியை சேர்ந்த சின்னபையன் மகன் குமார், வீரப்பன் மகன் குமார், துட்டம்பட்டியை சேர்ந்த குமார், செல்வராஜ், மாரமங்கலம் பகுதியை சேர்ந்த கணேஷ், பெங்களூருவை சேர்ந்த மணி ஆகியோர் அவளை தேடி தீவட்டிப்பட்டிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் அருகே வந்து விசாரித்தனர்.
அப்போது அவர்களுக்கும், தீவட்டிப்பட்டி காலனி பகுதியை சேர்ந்த ராஜா, வேலு, மூக்கனூர் பகுதியை சேர்ந்த ஜெயராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் எலத்தூரை சேர்ந்த அர்ச்சுனன் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
கைதுஇதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் தீவட்டிப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதையொட்டி இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக சிறுமியின் உறவினர் அரியாம்பட்டியை சேர்ந்த சின்னப்பையன் மகன் குமார்(21) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ராஜா(22), வேலு, ஜெயராமன், அர்ச்சுனன் ஆகியோர் மீது தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகிறார்கள்.
இதுபோல ராஜா கொடுத்த புகாரின் பேரில் அரியாம்பட்டியை சேர்ந்த சின்னப்பையன் மகன் குமார், வீரப்பன் மகன் குமார்(26), துட்டம்பட்டியை சேர்ந்த குமார்(36), செல்வராஜ்(28), மாரமங்கலம் பகுதியை சேர்ந்த கணேஷ்(33) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் சிறுமியின் தந்தை தனது மகள் கடத்தப்பட்டது குறித்து தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ் 19 வயது வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவர் ராசிபுரத்தில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார். சிறுமி மீட்கப்பட்டு சேலத்தில் உள்ள மகளிர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தீவட்டிப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக தீவட்டிப்பட்டி, மூக்கனூர், எலத்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.