மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி மோதி தந்தை–மகன் பலி டிரைவர் கைது
ஓசூரில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி மோதியதில் தந்தை–மகன் பலியானார்கள்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கட்டிகானப்பள்ளியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 41). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு பசவன்குடி பகுதியில் தங்கி கார் டிரைவராக வேலைப் பார்த்து வந்தார். இவரது மனைவி ராதா (38). இவர்களுக்கு மீனா என்ற மகளும், பிரவீன்குமார் (15), ஹேமந்த்குமார் (12) என்ற மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் முருகேசன், கட்டிகானப்பள்ளி கிராமத்தில் சீட்டுப்பணம் கட்டி வந்ததாக தெரிகிறது. அங்கு யுகாதி பண்டிகையை முன்னிட்டு சீட்டு போட்டுள்ளவர்களுக்கு இறைச்சி மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவது வழக்கம். அதை வாங்குவதற்காக முருகேசன் தனது மகன் பிரவீன்குமாருடன் மோட்டார்சைக்கிளில் கட்டிகானப்பள்ளி வந்தார்.
தந்தை–மகன் பலிஅங்கு இறைச்சி மற்றும் பரிசுப்பொருட்களை வாங்கி கொண்டு மீண்டும் பெங்களூருவுக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். அவர்கள் ஓசூரில் ராயக்கோட்டை பிரிவு சாலையில் மேம்பாலம் பக்கமாக வந்து கொண்டிருந்தனர். அப்போது நாமக்கல்லில் இருந்து ரிக் லாரி ஒன்று பின்னால் வந்து கொண்டிருந்தது. அந்த நேரம் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் முருகேசனும், அவரது மகன் பிரவீன்குமாரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான தந்தை – மகன் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நாமக்கல்லைச் சேர்ந்த போர்வெல் லாரி டிரைவரான பெரியசாமி (49) என்பவரை கைது செய்தனர்.