மழை பொய்த்ததால் வரத்து குறைந்தது: உழவர்சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு


மழை பொய்த்ததால் வரத்து குறைந்தது: உழவர்சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு
x
தினத்தந்தி 1 April 2017 4:00 AM IST (Updated: 31 March 2017 7:26 PM IST)
t-max-icont-min-icon

மழை பொய்த்து போனதால் நாமக்கல் உழவர்சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல்லில் உள்ள கோட்டை சாலையில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த உழவர்சந்தைக்கு நேற்று லாரிகள் வேலைநிறுத்தம், மழை பொய்த்ததால் வறட்சி போன்ற காரணங்களால் 12 டன் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன. இவை ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டன.

இதுகுறித்து உழவர்சந்தை அதிகாரிகள் கூறியதாவது:–

விலை உயர்வு

நாமக்கல் மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக உழவர்சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்து வருகிறது. கடந்த மாதம் 15 டன் வரை காய்கறிகள் வந்தன. தற்போது 12 டன் மட்டுமே வருகின்றன. காய்கறிகளின் வரத்து குறைந்து வருவதால், அவற்றின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்து உள்ளது.

லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வந்தாலும் விவசாயிகள் இருசக்கர வாகனங்கள் மற்றும் பஸ்களில் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்து விட்டனர். ஊட்டி போன்ற இடங்களில் இருந்து வரும் காய்கறிகள் மட்டும் மிகவும் குறைவாக வந்தன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.20–க்கும், கத்தரி கிலோ ரூ.70–க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.54–க்கும், புடலை கிலோ ரூ.44–க்கும், பாகல் கிலோ ரூ.60–க்கும் விற்பனை செய்யப்பட்டன.


Next Story