வேலூர் வங்கியில் ரூ.22 லட்சம் கொள்ளை: ‘சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கொள்ளையடித்தேன் கைதான காசாளர் வாக்குமூலம்


வேலூர் வங்கியில் ரூ.22 லட்சம் கொள்ளை: ‘சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கொள்ளையடித்தேன் கைதான காசாளர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 1 April 2017 4:15 AM IST (Updated: 31 March 2017 10:14 PM IST)
t-max-icont-min-icon

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வேலூர் வங்கியில் ரூ.22 லட்சத்தை கொள்ளையடித்ததாக, கைது

வேலூர்,

வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரி வளாகத்தில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் இயங்கி வரும் இந்த வங்கியில் சென்னை ராயபுரத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 28) என்பவர் காசாளராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 28–ந் தேதி நள்ளிரவில் இந்த வங்கியில் ரூ.22 லட்சம் கொள்ளை போனது. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அப்போது ரூ.22 லட்சத்தை கொள்ளையடித்தது வங்கி காசாளர் நாகராஜ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து மேல் விசாரணை நடத்தினர். இதில் அவர் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பணத்தை கொள்ளையடித்ததாக கூறியிருக்கிறார்.

அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

ஜன்னல் கம்பியை வளைத்தேன்

சென்னை ராயபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனக்கு திருமணமாகி மனைவியும், 4 மாத பெண் குழந்தையும் உள்ளனர். நான் கடந்த 2013–ம் ஆண்டு சென்னையில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கிருந்து 8 மாதங்களுக்கு முன்பு வேலூர் சி.எம்.சி. வளாகத்தில் உள்ள வங்கி கிளைக்கு மாறுதலாகி வந்தேன். தினமும் சென்னையில் இருந்து வேலூருக்கு வந்து செல்வேன்.

கடந்த ஒரு வாரமாக காசாளராக பணிபுரிந்து வருகிறேன். 28–ந் தேதி இரவு நானும், முருகன் என்பவரும் பணியில் இருந்தோம். அப்போது முருகனை வெளியில் அனுப்பிவிட்டு லாக்கரில் இருந்து ரூ.22 லட்சத்தை எடுத்து பக்கத்து அறையில் மறைத்து வைத்துவிட்டு பணம் கொள்ளை போனது போன்று ஜன்னல் கம்பியை நானே வளைத்து வைத்தேன்.

பின்னர் முருகன் வந்ததும் பணம் கொள்ளை போனதாக நாடகமாடினேன். வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும், சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு ஆசைப்பட்டும் பணத்தை கொள்ளையடித்தேன். ஆனால் நான் கொள்ளையடித்ததை போலீசார் கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


Next Story