திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பாடை கட்டி ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்


திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பாடை கட்டி ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 April 2017 4:30 AM IST (Updated: 31 March 2017 10:19 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பாடை கட்டி ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருவண்ணாமலை மாவட்ட குழு சார்பில், டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் எஸ்.பலராமன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தேசிய மற்றும் மாநில நதிகளை இணைக்க வேண்டும், தமிழகத்துக்கு வறட்சி நிவாரணத்தை முழுமையாக அறிவிக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், குடிநீர் பிரச்சினையை தவிர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாடை கட்டி ஒப்பாரி

வறட்சியின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மற்றும் மரணமடைந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான தீவனம் பற்றாக்குறை ஏற்படாமல் மானிய விலையில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் நினைவாக அங்கு பாடை கட்டி கொண்டு வந்து ஒப்பாரி வைத்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும் போலீசாரின் எதிர்ப்பையும் மீறி விவசாயிகள் பாடையை சுற்றி வந்து ஒப்பாரி வைத்து கோ‌ஷங்களை எழுப்பினர்.


Next Story