திருவண்ணாமலையில் போலி பணி நியமன ஆணை: தமிழ் ஆசிரியர் பணியிடை நீக்கம் 4 பேரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக புகார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் போலி பணி நியமன ஆணை தொடர்பாக தமிழ் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா இரும்புலி கிராமத்தை சேர்ந்த கருணாநிதியின் மனைவி மகேஸ்வரி (வயது 36), இவரது தம்பி ராஜசேகர் (32) ஆகியோர் ஆசிரியர் பணி போலி நியமன ஆணை தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், முத்துலட்சுமி, அவரது தங்கை புனிதவதி மற்றும் விஜயகுமார் ஆகியோர் போலி பணி நியமன ஆணை கொடுத்து மாவட்டத்தின் வெவ்வேறு அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்ந்து இருப்பது, தெரியவந்தது. இதனால் அவர்கள் 3 பேரும் தலைமறைவாகினர்.
முத்துலட்சுமி, புனிதவதி ஆகியோர் போலி பணி நியமன ஆணை வழங்கி பணியில் சேர்ந்ததற்கு உடந்தையாக இருந்த முத்துலட்சுமியின் கணவரும், ஆவணியாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருமான (பொறுப்பு) சக்திவேலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் பணியிடை நீக்கம் செய்தார்.
பணியிடை நீக்கம்கைதான மகேஸ்வரியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவரிடம் இருந்து ரூ.3½ லட்சம் வாங்கிக் கொண்டு போலி பணி நியமன ஆணையை கொடுத்தவர் ஆரணி அருகேயுள்ள விளை அரசுப்பள்ளியில் பணிபுரிந்து வரும் தமிழ் ஆசிரியர் சக்கரபாணி என தெரியவந்தது.
இதையடுத்து சக்கரபாணியை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:–
நியமன ஆணைகள் சரிபார்ப்புசக்கரபாணி மீது விழுப்புரத்தை சேர்ந்த ஆசிரியை வசந்தா, நீலகிரியை சேர்ந்த ஆசிரியை காந்திமதி ஆகியோர் தங்களிடம் இருந்து பணியிட மாறுதலுக்காக பல லட்சம் வாங்கி ஏமாற்றியதாகவும், கலசபாக்கம் மேல்பாலூரை சேர்ந்த பாண்டு, ஆரணியை சேர்ந்த ரவிசங்கர் ஆகியோர் தங்களிடம் போலி பணி நியமன ஆணை வழங்க பல லட்சம் பெற்றதாகவும் புகார் அளித்துள்ளனர். சக்கரபாணி மீது தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
அவர் மீது புகார் கொடுத்த 4 பேரின் புகார் மனுக்கள் குறித்து விசாரணை செய்யவும் காவல்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது 2012–ம் ஆண்டு பணிக்கு சேர்ந்தவர்களின் நியமன ஆணைகள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.