சென்னை சினிமா படப்பிடிப்பு குழு வேன் மீது லாரி மோதி 2 பேர் பலி 6 பேர் படுகாயம்


சென்னை சினிமா படப்பிடிப்பு குழு வேன் மீது லாரி மோதி 2 பேர் பலி 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 1 April 2017 5:00 AM IST (Updated: 31 March 2017 10:44 PM IST)
t-max-icont-min-icon

சென்னை சினிமா படப்பிடிப்பு குழுவினர் சென்ற வேன் மீது லாரி மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

தஞ்சாவூர்,

நடிகர் பிரபுதேவா, லட்சுமிமேனன், தங்கர்பச்சான் ஆகியோர் நடிக்கும் ‘‘யங் மங் சங்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 20 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் அர்ஜூன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று காலை திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் நடைபெற இருந்தது. இதற்காக சென்னையை சேர்ந்த சினிமா படப்பிடிப்பு குழுவினர் மற்றும் சமையல் குழுவினர் 5–க்கும் மேற்பட்ட வேன்கள் மூலம் கபிஸ்தலம் வழியாக திருவையாறுக்கு சென்று கொண்டிருந்தனர். கபிஸ்தலம் அருகே உள்ள கருப்பூர் என்ற பகுதியில் வேன்கள் சென்று கொண்டிருந்தபோது பெரம்பலூரிலிருந்து ஜல்லிகற்கள் ஏற்றிவந்த லாரி எதிர்பாராதவிதமாக ஒரு வேன் மீது நேருக்குநேர் மோதியது.

பரிதாப சாவு

இதில் வேன் டிரைவர் கும்பகோணத்தை சேர்ந்த விஜயக்குமார்(வயது 40) மற்றும் சமையல் தொழிலாளி சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்(56) என்பவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

வேனில் பயணம் செய்த சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சமையல் தொழிலாளிகள் செல்லப்பா, ராமமூர்த்தி, மோகன், பாப்பாத்தி அம்மாள், தமிழரசி, சுரேஷ் ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகர்கள் ஆறுதல்

விபத்து குறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் பிரபுதேவா, இயக்குனர் தங்கர்பச்சான் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.


Next Story