தூத்துக்குடியில் ரூ.23½ கோடியில் லாரி நிறுத்தும் முனையம் வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஆனந்தசந்திரபோஸ் பேட்டி


தூத்துக்குடியில் ரூ.23½ கோடியில் லாரி நிறுத்தும் முனையம் வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஆனந்தசந்திரபோஸ் பேட்டி
x
தினத்தந்தி 1 April 2017 3:00 AM IST (Updated: 31 March 2017 11:47 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.23½ கோடி செலவில் லாரி நிறுத்தும் முனையம் அமைக்கப்பட உள்ளது என்று துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஆனந்தசந்திரபோஸ் கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.23½ கோடி செலவில் லாரி நிறுத்தும் முனையம் அமைக்கப்பட உள்ளது என்று துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஆனந்தசந்திரபோஸ் கூறினார்.

இதுகுறித்து அவர் துறைமுக அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தூய்மை திட்டம்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருவார தூய்மை திட்டம் கடைபிடிக்கப்பட்டது. இதில் துறைமுகம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன. அலுவலகத்தில் உள்ள பழைய பொருட்கள் அகற்றப்பட்டன. பொதுமக்கள், துறைமுக ஊழியர்களுக்கு சுத்தம் தொடர்பாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

துறைமுகத்தின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதற்காக சரக்கு கையாளும் தளங்களில் இருந்து கப்பலுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் திட்டம் ரூ.1½ கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. சர்வதேச காற்று மாசு தடுப்பு சான்றிதழ் பெற்ற கப்பல்கள் மட்டுமே துறைமுகத்துக்குள் வரமுடியும். துறைமுகத்தில் ஏற்படும் எண்ணெய் கசிவை தடுக்க எண்ணெய் தடுப்பான் அமைக்கப்பட்டு உள்ளது. சரக்கு கையாளும் பகுதிகளில் 24 மணி நேரமும் மாசு கட்டுப்பாட்டு குழு செயல்பட்டு வருகிறது. கப்பலில் இருந்து சரக்குகள் கையாளும் போது, சரக்குகள் கடலுக்குள் சிந்தாமல் இருப்பதற்காக கப்பலுக்கும், கப்பல் தளத்துக்கும் இடையே வலைகள் அமைக்கப்படுகின்றன.

லாரி நிறுத்தும் முனையம்

மேலும் துறைமுகத்துக்குள் வந்து செல்லக்கூடிய லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர்களுக்கான தங்கும் விடுதி, சிற்றுண்டி, அடிப்படை வசதிகளுடன் கூடிய லாரி நிறுத்தும் முனையம் ரூ.23 கோடியே 69 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த முனையம் சுமார் 52 ஆயிரத்து 609 சதுர மீட்டர் பரப்பில் 200 லாரிகள் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் டிசம்பர் 2017 மாதத்துக்குள் முடிக்கப்படும்.

துறைமுகத்தில் கார்பன் வெளிப்பாட்டை கட்டுப்படுத்துவதற்காக 25 மெகாவாட் காற்றாலை மின்சக்தி திட்டம், 5 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. துறைமுக வளாகத்தில் காற்று தரம் கண்காணிப்பு நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.

இவ்வாறு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஆனந்தசந்திரபோஸ் கூறினார்.

அப்போது, துணைத்தலைவர் நடராஜன், துணை செயலாளர் வித்யா, தலைமை மருத்துவ அதிகாரி ஜோசப்சுந்தர், தலைமை மெக்கானிக்கல் என்ஜினீயர் ரவீந்திரன், போக்குவரத்து மேலாளர் ராஜேந்திரன், தலைமை என்ஜினீயர் பாட்டீல், நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி சாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story