2–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம்: நெல்லை நயினார் குளம் மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம்
நெல்லை மாவட்டத்தில் நேற்று 2–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனால் நெல்லை நயினார்குளம் மார்க்கெட்டில் காய்கறிகள் தேங்கி கிடக்கின்றன.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் நேற்று 2–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனால் நெல்லை நயினார்குளம் மார்க்கெட்டில் காய்கறிகள் தேங்கி கிடக்கின்றன.
வேலை நிறுத்தம்லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. வாகன காப்பீட்டு தொகை உயர்வை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல் –டீசல் மீதான ‘‘வாட்’’ வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று 2–வது நாளாகவும் வேலை நிறுத்தம் நடைபெற்றது.
இதன் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து பெரும்பாலான லாரிகள் தமிழ்நாட்டுக்குள் வரவில்லை. அதேபோல் தமிழகத்தில் இருந்தும் வெளி மாநிலங்களுக்கு லாரிகள் இயக்கப்படவில்லை. செங்கோட்டை, புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு செல்லும் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
2–வது நாளாக...நெல்லை மாவட்ட லாரி உரிமையாளர் சங்கமும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன. இதனால் நயினார் குளம் மார்க்கெட்டுக்கு வந்த லாரிகள் காய்கறிகளை இறக்கி வைத்து விட்டு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. ஒரு சில லாரிகள் நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. நேற்று அங்கு லாரி டிரைவர்கள், தாங்களாகவே சமையல் செய்து சாப்பிட்டு ஓய்வு எடுத்தனர்.
ஒருசில லாரிகளில் இருந்து காய்கறி மூடைகளை இறக்க முடியாமல் மார்க்கெட் முன்பு ரோடு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
காய்கறிகள் தேங்கினநயினார் குளம் மார்க்கெட்டில் இருந்து கேரள மாநிலம் மற்றும் வெளியூர்களுக்கு லாரி, வேன் மூலம் காய்கறிகள் கொண்டு செல்லப்படுவது வழக்கம். லாரிகள் ஓடாததால் காய்கறிகள் மார்க்கெட்டில் தேங்கின. பல்லாரி, உருளை கிழங்கு, கேரட் உள்ளிட்ட காய்கறிகள் மூடை, மூடையாக மார்க்கெட்டுக்குள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து நெல்லை காய்கறிகள் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வகுமார் கூறியதாவது:–
நயினார் குளம் மார்க்கெட்டுக்கு ஆந்திரா, மராட்டிய மாநிலம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்கு மூடைகள் வரும். ஓசூரில் இருந்து காலிப்பிளவரும், ஊட்டியில் இருந்து கேரட்டும் லாரிகளில் கொண்டு வரப்படும். அதேபோல் சுற்று வட்டார பகுதியில் இருந்து கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய், எலுமிச்சை பழம் உள்ளிட்டவைகளும் வரும். ஒரு நாளைக்கு 100–க்கும் மேற்பட்ட லாரிகள் மார்க்கெட்டுக்கு வந்து செல்லும். இங்கு இருந்து கேரள மாநிலத்துக்கு 50–க்கும் மேற்பட்ட வாகனங்களில் காய்கறிகள் கொண்டு செல்லப்படும்.
விலை உயரும்லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்ததால் காய்கறிகள் வரத்து குறைந்து விட்டது. அதேபோல் வெளியூர்களுக்கு காய்கறிகளையும் கொண்டு செல்ல முடியவில்லை. காய்கறிகள் தேங்கி கிடக்கின்றன. இந்த நிலை நீடித்தால் காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும். எனவே லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை மத்திய–மாநில அரசுகள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.