எங்களுடைய மகனை மீட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு மிக்க நன்றி வடக்கன்குளம் என்ஜினீயரின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி


எங்களுடைய மகனை மீட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு மிக்க நன்றி வடக்கன்குளம் என்ஜினீயரின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி
x
தினத்தந்தி 1 April 2017 2:30 AM IST (Updated: 1 April 2017 12:21 AM IST)
t-max-icont-min-icon

எங்களுடைய மகனை மீட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்வதாக, வடக்கன்குளம் என்ஜினீயரின் தந்தை கண்ணீர் மல்க கூறினார்.

வடக்கன்குளம்,

எங்களுடைய மகனை மீட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்வதாக, வடக்கன்குளம் என்ஜினீயரின் தந்தை கண்ணீர் மல்க கூறினார்.

என்ஜினீயர்கள் மீட்பு

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்தவர் முத்து விஜயபூபதி. இவருடைய மனைவி திருமகள். இவர்களுக்கு மிதுன் கணேஷ் (வயது 27), பிரவீன் ஆகிய மகன்கள் உள்ளனர். மிதுன் கணேஷ் பி.இ. முடித்து விட்டு தெற்கு சூடானில் உள்ள எண்ணெய் எடுக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருடன் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை பகுதியைச் சேர்ந்த அம்புரோஸ் மகன் எட்வர்டு (40) என்பவரும் பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் 8–ந் தேதி வேலைக்கு சென்ற மிதுன் கணேஷ், எட்வர்டு ஆகிய 2 பேரையும் கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்று விட்டதாக தெற்கு சூடானில் இருந்து மிதுன் கணேஷின் நண்பர்கள் அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் 2 பேரின் குடும்பத்தினரும் பெரிதும் கலக்கம் அடைந்தனர்.

குடும்பத்தினர் மகிழ்ச்சி

தங்களது மகன்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2 பேரின் குடும்பத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மத்திய அரசின் நடவடிக்கையால், தெற்கு சூடானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் 2 பேரும் மீட்கப்பட்டதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். இதனால் மிதுன் கணேஷ், எட்வர்டு ஆகியோரின் குடும்பத்தினர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக மிதுன் கணேசின் தந்தை, விஜயபூபதி கூறியதாவது:–

கடந்த மார்ச் மாதம் 8–ந் தேதி எனது மகன் கடத்தப்பட்டதில் இருந்து நாங்கள் தினமும் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தோம். சரியாக சாப்பிடவில்லை. தூக்கம் வரவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகவே இருந்தது. கடவுளை தினமும் வேண்டினோம். இந்தநிலையில் தான் நேற்று இரவு (அதாவது நேற்று முன்தினம்) என்னுடைய மகன் மிதுன் கணேஷ் போனில் திடீரென என்னிடம் பேசினான். அரசு தங்களை மீட்டு விட்டதாகவும், நாங்கள் இருவரும் மிகவும் நலமாக இருப்பதாகவும் கூறினான். இதை கேட்டதும் எங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. எங்கள் மகன் போனில் பேசிய பிறகு தான் எங்களுக்கு உயிரே வந்தது. எனது மகனை மீட்க உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கும், பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கும் கண்ணீர் மல்க மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நேற்று காலையில் எனது மகன் பேசும் போது, இந்திய தூதரகத்தில் நலமாய் இருப்பதாகவும், அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு போனில் தகவல் தெரிவித்துவிட்டு புறப்படுவேன் என்றும் கூறினான். அநேகமாக இன்னும் ஓரிரு நாட்களில் ஊர் திரும்புவான் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


Next Story