டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்தியூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலில் உள்ள பவானி ரோட்டில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையை அகற்றி ஆப்பக்கூடல் பேரூராட்சிக்கு உள்பட்ட சாத்தநாயக்கனூர் பகுதியில் அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. இதையொட்டி சாத்தநாயக்கனூரில் கடையும் தேர்வு செய்யப்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் சாத்தநாயக்கனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 10–க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சாத்தநாயக்கனூரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆ.கரட்டுப்பாளையத்துக்கு நேற்று காலை 9.30 மணி அளவில் ஒன்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்குள்ள அந்தியூர்–ஆப்பக்கூடல் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைஇதுபற்றி அறிந்ததும் பவானி தாசில்தார் குணசேகரன், டாஸ்மாக் அதிகாரிகள், ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. மேலும் அருகில் பள்ளிக்கூடங்கள், கோவில்கள் ஆகியவை உள்ளன. அதுமட்டுமின்றி பஸ் நிறுத்தமும் உள்ளது.
இவ்வளவு போக்குவரத்து நெரிசல் நிறைந்த இந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் கடைக்கு மது குடிக்க வருபவர்களால் பஸ் ஏற வரும் பெண்கள் மற்றும் பஸ்சில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் பெண்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ–மாணவிகள், செங்கல் சூளைக்கு செல்லும் தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த பகுதியில் கண்டிப்பாக டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது,’ என்று தெரிவித்தனர்.
போக்குவரத்து பாதிப்புஇதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘சாத்தநாயக்கனூர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க மாட்டோம்,’ என்று கூறினார்கள்.
இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து 11.30 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன்காரணமாக அந்தியூர்–ஆப்பக்கூடல் ரோட்டில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.