வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு கறவைமாடுகள் நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கினார்
தமிழகத்தில் வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட 25 விவசாயிகளின் குடும்பங்களுக்கு கறவை மாடுகளை ஈரோட்டில் நடந்த விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கினார்.
ஈரோடு,
கடும் வறட்சியால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் வறட்சியால் வாடும் விவசாய குடும்பங்களுக்கு நிதி உதவி மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா ஈரோட்டில் நேற்று நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த விழாவுக்கு விவசாயிகள் சங்க தலைவர் காசியண்ணன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க நிர்வாகிகள் டாக்டர் தங்கராஜ், வி.எம்.வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் திரைப்பட நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு அவருடைய சொந்த நிதியில் இருந்து பல்வேறு மாவட்டங்களிலும் வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட 25 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிதி உதவி மற்றும் தலா 2 கறவை மாடுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
பாதிப்புநான் கண் எதிரில் பார்க்கும் தெய்வமாக நினைப்பது எனது தாயை. அதற்கு பின்னர் எனது ரசிகர்கள். 3–வது நான் கண் எதிரில் காணும் தெய்வங்கள் விவசாயிகள்தான். அப்படிப்பட்ட விவசாயிகளின் தற்கொலை மரணம் என்னை பாதித்தது. பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தை என்னிடம் தெய்வசிகாமணி அழைத்து வந்தார். அவர்களின் பரிதாப நிலை என்னை மிகவும் பாதித்தது. தற்கொலை செய்ய மிகவும் தைரியம் வேண்டும். அந்த தைரியத்தை வாழ்வதற்கு பயன்படுத்திக்கொள்ளலாமே என்று கேட்டேன். அப்போது அவர், நகரப்பகுதியில் யார் என்ன பேசினாலும் அப்படியே கேட்டுவிட்டு மறந்து செல்வார்கள். ஆனால் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் ஒரு சொல்லுக்காகவே உயிர் கொடுப்பார்கள் என்றபோது வலி புரிந்தது.
நான் அந்த குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் கொடுத்தேன். அது ரசிகர்கள் எனக்கு கொடுத்த பணம். ரசிகர்களின் அன்பு, கைத்தட்டல், மக்களின் வாழ்த்துக்கு முன்பு பணம் எல்லாம் பெரிய விஷயமில்லை. எனவே பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளின் குடும்பத்தினருக்கும் உதவுவது என்று முடிவு செய்தேன். இதற்கான முதல் கட்ட உதவியாக இது உள்ளது.
அரசியல் தெரியாதுஇதை நான் ஏன் முன்னெடுத்து செய்ய வேண்டும். எனக்கு அரசியல் தெரியாது. தெரியாத விஷயத்துக்குள் போக மாட்டேன். ஆனால் எனக்கு தர்மம் செய்ய தெரியும்.
எனவே அரசிடம் இவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள் என்று போராடி அரசியல் செய்வதை விடுத்து, நானே என்னால் முடிந்த உதவியை செய்ய முன்வந்து உள்ளேன். முதலில் விவசாயிகள் கடன் குறித்து கேட்டபோது, ஒவ்வொரு தனி நபருக்கும் 10 லட்சம், 20 லட்சம் ரூபாய்கள் இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் விசாரித்து கேட்டால் ரூ.40 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என்று குறைந்த தொகைதான் இருந்தது. இதை நாமே மீட்டுக்கொடுக்கலாமே என்று நினைத்தேன். முதல் கட்டமாக 2 பேருக்கு அவர்களின் வங்கிக்கடனில் இருந்த தாலிக்கொடியை மீட்டுக்கொடுத்து இருக்கிறேன்.
சிவலிங்காஎனது ‘மொட்டை சிவா கெட்ட சிவா’ படத்தின் வருவாயில் ரூ.1 கோடியை இளைஞர்களுக்காக ஆனந்தவிகடன் அறக்கட்டளை மூலம் வழங்கினேன். அடுத்து வரும் ‘சிவலிங்கா’ திரைப்படத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை விவசாயிகளுக்காக நானே நேரடியாக வழங்க இருக்கிறேன். கண்டிப்பாக இனிமேல் எவ்வளவு தொகை வழங்குவேன் என்று நான் கூற மாட்டேன். இது ரசிகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் எனது படத்தை பார்த்து வழங்கிய பணம். அதை மக்களுக்கே கொடுக்கிறேன். இதை எனது குடும்பத்தினரும் புரிந்து கொண்டு உள்ளனர்.
நான் எப்போதும் தலைவனாக வேண்டும் என்று நினைத்தது இல்லை. தலைவனாக இருந்தால் தலைக்கணம் வரும். தொண்டனாக இருந்தால் நீண்டநாள் தொண்டு செய்ய முடியும்.
தற்கொலை கூடாதுஎனது பணியில் திருநங்கைகளும் தங்கள் பங்குக்கு 2 கறவை மாடுகள், 2 கன்றுக்குட்டிகள் வாங்கி கொடுத்து உள்ளனர். திருநங்கைகள் என்றால் துரதிருஷ்டமானவர்கள் என்பதை மாற்றி அதிர்ஷ்ட லட்சுமிகள் என்ற பெயரை அளித்து இருக்கிறோம். என்னோடு ரசிகர்கள், பொதுமக்களும் விவசாயிகளுக்கு உதவ முன்வரலாம். நீங்கள் தலா ரூ.1 கொடுத்து உதவினாலும் போதும். இனிமேல் தமிழகத்தில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்து சாகக்கூடாது. சாக விடமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்.
நான் திரைப்படத்துறைக்கு தனியாக வந்தேன். என்னை சண்டை இயக்குனர் சூப்பர் சுப்பராயனும், சூப்பர்ஸ்டார் ரஜினியும் திரைத்துறைக்கு அழைத்து வந்தனர். தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.
இவ்வாறு நடிகர் ராகவா லாரன்ஸ் பேசினார்.
விழாவில் திரைப்பட டைரக்டர் கரு.பழனியப்பன் உள்பட பலர் பேசினார்கள். ஏற்பாடுகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி.கே.தெய்வசிகாமணி தலைமையில் விவசாயிகள் செய்து இருந்தனர்.