திருமுல்லைவாயலில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை


திருமுல்லைவாயலில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 1 April 2017 3:45 AM IST (Updated: 1 April 2017 12:42 AM IST)
t-max-icont-min-icon

திருமுல்லைவாயலில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

ஆவடி,

அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல் தந்தை பெரியார் நகர் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி என்ற யமகா பாலாஜி (வயது 36), பிரபல ரவுடி. நேற்று முன்தினம் இரவு பாலாஜி, தனது நண்பர்களுடன் திருமுல்லைவாயல் ரெயில் நிலையத்தை ஒட்டி உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தின் உள்ளே அமர்ந்து மது அருந்தினார்.

அப்போது பாலாஜியின் நண்பர்கள் பிறந்த நாள் விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்றனர். பாலாஜி அவர்களுடன் செல்ல மறுத்து மண்டபத்தின் உள்ளே காவலாளி குப்புசாமியுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.

வெட்டிக்கொலை

சிறிது நேரம் கழித்து அங்கு ஆட்டோவில் வந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல், மண்டபத்துக்குள் நுழைந்தனர். அவர்களை பார்த்த பாலாஜி, அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் பாலாஜியை கத்தியால் சரமாரியாக வெட்டினர்.

இதில் தலை, மார்பு உள்பட உடலில் பல இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பாலாஜி, ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த காவலாளி குப்புசாமி, அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி விட்டார். பின்னர் அந்த கும்பல் ஆட்டோவில் தப்பிச்சென்று விட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் இணை கமி‌ஷனர் சந்தோஷ்குமார், துணை கமி‌ஷனர் சுதாகர், உதவி கமி‌ஷனர் நந்தகுமார். திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர் கொலையான பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொலை வழக்கு

கொலையான பாலாஜி மீது அயனாவரம், ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல் உள்பட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, அடிதடி போன்ற வழக்குகள் உள்ளன. கடந்த 2009–ம் ஆண்டு சென்னை அயனாவரத்தில் கதிர் என்ற கதிரவன் என்பவரை கொலை செய்த வழக்கும் உள்ளது.

எனவே முன்விரோதம் காரணமாக அவரை எதிரிகள் வெட்டிக்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஏற்கனவே இவரை சென்னையில் கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாகவும் தெரிகிறது.

கொலையாளிகளை பிடிக்க உதவி கமி‌ஷனர் நந்தகுமார் தலைமையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொலையாளிகளின் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

Next Story