கூடலூரில் வண்ணத்து பூச்சிகள் இல்லாத பூங்கா சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஏமாற்றம்
கூடலூரில் வண்ணத்து பூச்சிகள் இல்லாத பூங்காவால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கூடலூர்,
கூடலூர் சட்டமன்ற தொகுதியில் நீண்ட காலமாக சுற்றுலா திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்பட வில்லை. இதனால் கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பூங்காக்கள் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி கடந்த 2015–ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கியது. பின்னர் கூடலூர் அருகே பொன்னூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் 25 சென்ட் நிலத்தில் வண்ணத்து பூச்சி பூங்கா அமைக்கப்பட்டது.
வண்ணத்து பூச்சிகள் இல்லாத பூங்காஇதற்காக பாலிதீன் கொண்டு மூடப்பட்ட 2 குடில்கள் அமைக்கப்பட்டன. மேலும் வண்ணத்து பூச்சிகளுக்கு விருப்பமான ஜனியா, சூரியகாந்தி, அஜிரேட்டம், வெர்பினா, சப்னேரியா குரோட்டேரியா, மொட்டு ரோஜா, சால்வியா உள்பட பலரக மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன.
மேலும் வண்ணத்து பூச்சிகள் உள்ள குடில்களில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையிலும், வண்ணத்து பூச்சிகளுக்கு தேவையான காலநிலை நிலவுகின்ற வகையில் 2 செயற்கை நீரூற்றுகள் மற்றும் புல்வெளி தளங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் இதுவரை வண்ணத்து பூச்சிகள் அங்கு வசிக்க வில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் பகுதி மக்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அரசு பணம் வீணாவதை தடுக்க கோரிக்கைஇது குறித்து தோட்டக்கலை பண்ணை நிர்வாகம் தரப்பில் கேட்ட போது, வண்ணத்து பூச்சிகளுக்கான சீசன் தொடங்கவில்லை. தற்போது முட்டைகள் மட்டுமே இட்டு வருகிறது. வருகிற ஜூன் மாதம் வண்ணத்து பூச்சிகள் அதிகளவு இடம் பெறும் என நம்பிக்கை உள்ளது. இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும் அரசு பணம் வீணாவதை தடுக்க பூங்காவை சிறந்த முறையில் பராமரிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.