கருவேல மரங்கள் வெட்டும் பணியில் கொத்தடிமைகளாக இருந்த 3 குடும்பத்தினர் மீட்பு


கருவேல மரங்கள் வெட்டும் பணியில் கொத்தடிமைகளாக இருந்த 3 குடும்பத்தினர் மீட்பு
x
தினத்தந்தி 1 April 2017 3:45 AM IST (Updated: 1 April 2017 12:58 AM IST)
t-max-icont-min-icon

கொத்தடிமைகளாக கருவேல மரங்கள் வெட்டும் வேலையில் ஈடுபட்டு இருந்த 2 குழந்தைகள் உள்பட 12 பேரை தாம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் வருவாய்த் துறையினர் மீட்டனர்.

தாம்பரம்,

பல்லாவரம் அருகே திருமுடிவாக்கத்தில் கொத்தடிமைகளாக கருவேல மரங்கள் வெட்டும் வேலையில் ஈடுபட்டு இருந்த 2 குழந்தைகள் உள்பட 12 பேரை தாம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் வருவாய்த் துறையினர் மீட்டனர்.

தாம்பரம் கோட்டாட்சியரிடம் புகார்

சென்னையை அடுத்த பல்லாவரம் தாலுகாவுக்கு உட்பட்ட திருமுடிவாக்கம் பகுதியில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவை சேர்ந்த ஒரு குடும்பத்தினரும், காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவை சேர்ந்த 2 குடும்பத்தினரும் என 3 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அங்குள்ள பாழடைந்த கட்டிடத்தில் கொத்தடிமைகளாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள், அந்த பகுதியில் உள்ள காலி நிலங்களில் உள்ள கருவேல மரங்களை வெட்டி விற்பனை செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரனிடம் தனியார் தொண்டு நிறுவனத்தினர் புகார் அளித்தனர்.

அதன்பேரில் கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில், அவரது நேர்முக உதவியாளர் ஜெயகுமார், பல்லாவரம் தாசில்தார் கவுசல்யா, மண்டல தாசில்தார் பிரபாகரன் மற்றும் வருவாய்த் துறையினர் திருமுடிவாக்கம் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

கொத்தடிமைகள் மீட்பு

விசாரணையில் திருவண்ணாமலை, காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த 3 குடும்பத்தினரையும் பழந்தண்டலம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் (வயது 61) என்பவர் கொத்தடிமைகளாக வைத்து கருவேல மரங்கள் வெட்டும் பணியில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து 3 குடும்பங்களை சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 12 பேரையும் மீட்டு, தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு உணவு மற்றும் நிதி உதவி அளித்து அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக கோட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

ரூ.2 லட்சம் நிதி உதவி

இது குறித்து தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன் கூறியதாவது:–

தாங்கள் ஏற்கனவே பெற்ற கடனுக்காக 3 குடும்பத்தினரும், வாங்கிய கடனை அடைக்கும் வரையில் அங்கிருந்து செல்லக்கூடாது என்று கூறி தண்ணீர் உள்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத ஒரே வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர்.

அவர்களிடம் விசாரித்த போது, நாங்கள் பெற்ற கடனுக்காக இங்கு தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும், தங்களை மீட்கும்படியும் கூறினர். அதன்படி 2 குழந்தைகள் உள்பட 12 பேரும் மீட்கப்பட்டனர். குழந்தைகளை தவிர மீட்கப்பட்ட 3 குடும்பங்களை சேர்ந்த 10 பேருக்கும் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story