பெங்களூருவில் குத்தகைதாரரிடம் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி கவுன்சிலர் கைது ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடி


பெங்களூருவில் குத்தகைதாரரிடம் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி கவுன்சிலர் கைது ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடி
x
தினத்தந்தி 1 April 2017 2:00 AM IST (Updated: 1 April 2017 1:04 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் குத்தகைதாரரிடம் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி கவுன்சிலரை ஊழல் தடுப்பு படை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூருவில் குத்தகைதாரரிடம் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி கவுன்சிலரை ஊழல் தடுப்பு படை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரூ.15 லட்சம் லஞ்சம்

பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜாஜிநகர் வார்டு கவுன்சிலராக இருந்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். முதல்–மந்திரி சித்தராமையாவின் நெருங்கிய ஆதரவாளராக கிருஷ்ணமூர்த்தி இருந்து வருகிறார். இந்த நிலையில், ராஜாஜிநகர் வார்டு பகுதியில் ரூ.3 கோடிக்கு பல்வேறு கட்டுமான பணிகளை மாநகராட்சி குத்தகைதாரர் தனஞ்செயா நாயுடு செய்திருந்தார். அந்த ரூ.3 கோடி தொகையை விடுவிக்கும்படி கூறி கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தியிடம் குத்தகைதாரர் தனஞ்செயா நாயுடு மனு கொடுத்திருந்தார்.

அந்த தொகையை விடுவிக்க வேண்டும் என்றால், ரூ.23 லட்சம் லஞ்சம் கொடுக்கும்படி கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, தனஞ்செயா நாயுடுவிடம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் ரூ.23 லட்சம் கொடுக்க மறுத்து விட்டார். பின்னர் 2 பேரும் பேரம் பேசியதாக தெரிகிறது. அதன்பிறகு, ரூ.15 லட்சத்தை லஞ்சமாக தருவதாக தனஞ்செயா நாயுடு கூறியதாகவும், இதற்கு கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மாநகராட்சி கவுன்சிலர் கைது

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத குத்தகைதாரர் தனஞ்செயா நாயுடு, இதுபற்றி பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீஸ் சூப்பிரண்டு கிரீசிடம் புகார் கொடுத்தார். அதைதொடர்ந்து ஊழல் தடுப்பு படை போலீசார் சில அறிவுரைகளை தனஞ்செயா நாயுடுவுக்கு வழங்கினார்கள். போலீஸ் அதிகாரிகள் கூறிய அறிவுரையின்படி நேற்று காலையில் மஞ்சுநாத் நகரில் உள்ள கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டிற்கு தனஞ்செயா நாயுடு சென்றார்.

அங்கு வைத்து லஞ்சமாக ரூ.15 லட்சத்தை கிருஷ்ணமூர்த்தியிடம் தனஞ்செயா வழங்கினார். அந்த பணத்தை அவரும் பெற்றுக்கொண்டதாக தெரிகிறது. அந்த சமயத்தில் ஊழல் தடுப்பு படை போலீஸ் சூப்பிரண்டு கிரீஷ் தலைமையிலான போலீசார், கவுன்சிலர் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினார்கள். மேலும் குத்தகைதாரரிடம் லஞ்சம் வாங்கிய கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தியை கையும், களவுமாக பிடித்து போலீசார் கைது செய்தார்கள்.

பரபரப்பு

அதன்பிறகு, அவரது வீட்டில் வைத்தே போலீஸ் சூப்பிரண்டு கிரீஷ் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தியிடம் 3 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். அதே நேரத்தில் ஊழல் தடுப்பு படை போலீசார், கவுன்சிலர் வீட்டில் சோதனை நடத்தி சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் குத்தகைதாரரிடம் இருந்து லஞ்சமாக வாங்கிய ரூ.15 லட்சத்தை கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தார்கள்.

இதுபற்றி மீது பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குத்தகைதாரரிடம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story