கிழக்கு மண்டல கடலோர காவல் படையில் அதிநவீன வசதி கொண்ட 2 ரோந்து படகுகள் அறிமுகம்


கிழக்கு மண்டல கடலோர காவல் படையில் அதிநவீன வசதி கொண்ட 2 ரோந்து படகுகள் அறிமுகம்
x
தினத்தந்தி 1 April 2017 4:30 AM IST (Updated: 1 April 2017 1:10 AM IST)
t-max-icont-min-icon

கிழக்கு மண்டல கடலோர காவல் படையில் அதிநவீன வசதி கொண்ட 2 ரோந்து படகுகள் அறிமுகம் செய்யப்பட்டது. மே மாதம் கடலோர காவல் படையில் இந்த படகுகள் இணைக்கப்படுகிறது.

சென்னை,

கிழக்கு மண்டல கடலோர காவல் படையில், நடுக்கடலில் மற்ற படகுகளை தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்ட ‘சி–431’, ‘சி–432’ ஆகிய 2 ரோந்து படகுகள் அறிமுகம் செய்யும் விழா திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்து உள்ள காட்டுப்பள்ளி ‘எல் அன் டி’ கப்பல் கட்டும் தளத்தில் நடந்தது. கடலோர காவல் படை அதிகாரிகளின் மனைவிமார்கள் சங்கத்தின் (தட்ரக்ஷிகா) தலைவி நிதி பர்கோத்ரா ரோந்து படகுகளை அறிமுகம் செய்தார். அப்போது கிழக்கு மண்டல கடலோர காவல் படை ஐ.ஜி. ராஜன் பர்கோத்ரா உடன் இருந்தார்.

பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து சுற்றி வந்து தீவிரவாதிகள் ஊடுருவல், கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களை தடுத்து கடல் மார்க்கமாக பாதுகாப்பை உறுதி செய்யும் அம்சங்கள் இந்த  படகில் இருக்கின்றன. இதில் தகவல் தொடர்பு உள்ளிட்ட அதிநவீன சாதனங்களும் உள்ளன. ஒரு ரோந்து படகில் ஒரு அதிகாரி, 2 துணை அதிகாரிகள், 12 ஊழியர்கள் பணியில் இருப்பார்கள்.

மே மாதம் இணைப்பு

இந்த ரோந்து படகுகள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர், மே மாதம் கடலோர காவல் படையில் இணைக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து சென்னை, காரைக்காலை மையமாக கொண்டு ரோந்து படகுகள் கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்.

‘எல் அன் டி’ கப்பல் கட்டும் நிறுவனத்தோடு 36 ரோந்து படகுகள் தயாரிப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட 2 ரோந்து படகுகளையும் சேர்த்து 30 படகுகள் கடலோர காவல் படைக்கு வழங்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள படகுகள் விரைவில் வழங்கப்பட இருக்கின்றன.

இத்தகவலை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளது. 

Next Story