கரூரில் நூதன முறையில் பண மோசடி செய்த வாலிபர்கள் 2 பேர் கைது


கரூரில் நூதன முறையில் பண மோசடி செய்த வாலிபர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 April 2017 4:15 AM IST (Updated: 1 April 2017 1:16 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் நூதன முறையில் பண மோசடி செய்த வாலிபர்கள் 2 பேர் கைது கார்,மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்

கரூர்,

கரூரில் நூதன முறையில் பண மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோதனை

போலி ரூபாய் நோட்டுகள் தயாரிக்கும் ஒரு கும்பல் கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருப்பதாக கரூர் நகர போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருதிவிராஜ், சப்– இன்ஸ்பெக்டர் ஜான்கென்னடி மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு அறையில் 2 பேர் சந்தேகத்திற்கு இடமலிக்கும் வகையில் தங்கியிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின்முரணாக பதில் அளித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணை

விசாரணையில், அவர்கள் அரவக்குறிச்சி அருகே உள்ள மணல்மேடு பகுதியை சேர்ந்த சண்முகம்(வயது 37), தூத்துக்குடி டி.வி.கே.நகரை சேர்ந்த பிரதீப்(31) என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் கடவூர் தாலுகா சிங்கம்பட்டி நடுத்தெருவை சேர்ந்த திருவேங்கடம் என்பவரிடம் ஒரு மடங்கு பணம் கொடுத்தால் அதனை 3 மடங்காக மாற்றிக்கொடுக்கிறோம் என்று கூறி அவரிடம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை ஏமாற்றியது தெரிந்தது.

கைது

இதைத்தொடர்ந்து வழக்குப்பதிந்து அவர்களை போலீசார் கைது செய்தனர் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா?, இது போல் இவர்கள் எத்தனை பேரை ஏமாற்றி உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 500, 2000 ரூபாய் நோட்டுகள் அளவிற்கு வெட்டப்பட்ட ஒருவித கலர் பேப்பர் பண்டல்கள், திரவிய பாட்டில்கள், 2 மடிக்கணினிகள், 4 செல்போன்கள், ரூ.1 லட்சத்து 30 ஆயிரம், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story