மூடிகெரே பகுதியில் காபி செடிகளில் பூக்கள் பூக்க தொடங்கின விவசாயிகள் மகிழ்ச்சி


மூடிகெரே பகுதியில் காபி செடிகளில் பூக்கள் பூக்க தொடங்கின விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 1 April 2017 2:00 AM IST (Updated: 1 April 2017 1:27 AM IST)
t-max-icont-min-icon

மூடிகெரே பகுதியில் காபி செடிகளில் பூக்கள் பூக்க தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிக்கமகளூரு,

மூடிகெரே பகுதியில் காபி செடிகளில் பூக்கள் பூக்க தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பரவலாக மழை

கர்நாடக மாநிலத்தில் குடகு, ஹாசன், சிக்கமகளூரு ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காபி செடிகள் பயிரிடப்பட்டு உள்ளன. இங்கிருந்து வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு காபி ஏற்றுமதி செய்யப்படுகிறது. சிக்கமகளூரு மாவட்டத்தில் சிக்கமகளூரு, மூடிகெரே, கொப்பா, சிருங்கேரி ஆகிய பகுதிகளில் அதிகமாக காபி செடிகள் பயிரிடப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த சில மாதங்களாக சிக்கமகளூரு மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால் காபி செடிகளில் வாட தொடங்கின. இதனால், காபி தோட்ட அதிபர்களும், விவசாயிகளும் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மூடிகெரே பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

பூக்கள் பூக்க தொடங்கின

இதனால், மூடிகெரே பகுதியில் பயிரிடப்பட்டிருந்த காபி செடிகளில் பூக்கள் பூக்க தொடங்கி உள்ளது. காபி தோட்டங்கள் எங்கும் வெள்ளை நிற பூக்கள் பூத்து குலுங்குகின்றன. மேலும் அதனுடைய நறுமணமும் அந்தப்பகுதியில் வீசுகிறது. இதனால் விவசாயிகள், காபி தோட்ட அதிபர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காபி செடிகளில் பூக்கள் பூத்துள்ளதால், ஒரு மாதம் வரை காபி தோட்ட தொழிலாளர்கள் மற்றும் வெளியாட்கள் யாரையும் காபி தோட்டங்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

ஏனெனில் தற்போது தான் பூக்கள் பூக்க தொடங்கி உள்ளதால், யாராவது காபி தோட்டங்களில் சென்றால், பூக்கள் உதிர்ந்துவிடும் என்பதால் யாரையும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் காபி தோட்ட தொழிலாளிகள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

டேங்கர் லாரிகள் மூலம்...

மூடிகெரே தவிர மாவட்டத்தில் மற்றப்பகுதிகளில் மழை பெய்யாததால், காபி செடிகள் வாட தொடங்கி உள்ளன. அந்தப்பகுதி விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். ஒருசில இடங்களில் டேங்கர் லாரிகள் மூலம் காபி செடிகளுக்கு தண்ணீர் விடும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.


Next Story